(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் முறையற்ற வெளிநாட்டுக் கொள்கையே ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான காரணமாகும்.

முறையான இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்திருந்தால் பிரேரணையை தோல்வியடையச் செய்திருக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

இவ்வாறு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்பதோடு , பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் தொடர்பில் காணப்படும் பயணத்தடை மேலும் நீடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேறாமல் இருப்பதற்கு முன்னெடுத்திருக்க வேண்டிய இராஜதந்திர நகர்வுகளை அரசாங்கம் முறையாக முன்னெடுக்கவில்லை.  

இதனால் ஏற்படப் போகும் பாதிப்புக்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. முழுநாடும் இதனால் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீட்டுக்கு நல்லாட்சி அரசாங்கம் காரணமல்ல. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2009 இல் பாங்கி மூனுக்கு வழங்கிய வாக்குறுதிகளே இதற்கான அடித்தளமாகும். எனினும் 2015 இல் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணைஅனுசரணை வழங்கியமை தவிர்த்திருக்க வேண்டியதொன்றாகும். 

ஆனால் இலங்கைக்கு ஏற்படவிருந்த பல்வேறு சர்வதேச அழுத்தங்களை இதன் மூலம் நீக்கிக் கொள்ள முடிந்தது. வாக்குறுதிகளை செயற்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதமே எமது அரசாங்கத்தில் ஏற்பட்ட தவறாகும்.

ஆனால் இம்முறை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையால் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலம் தகனம் செய்யப்பட்டமை உள்ளிட்ட விடங்களில் முறையற்ற கொள்ளையொன்றின் அடிப்படையில் அரசாங்கம் செயற்பட்டமையின் காரணமாகவே இம்முறை நட்பு நாடுகளின் ஆதவைக் கூட ஐ.நா.வில் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய எந்தவொரு செயற்திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. மாறாக தமக்கு எதிரான நிலைப்பாடுகளுடையவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளது. 

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன். எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் சுயாதீன ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து , ஊடகவியலாளர்களை கொலை செய்ததைப் போன்று இன்றும் செயற்பட முடியாது. அதற்கான சூழல் தற்போது இல்லை என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான நிலையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை பாரதூரமானதாகும். இப் பிரேரணை செப்டெம்பரில் மாறுபட்ட வகையில் மீண்டும் முன்வைக்கப்படக் கூடும். அத்தோடு இலங்கையில் இடம்பெறும் சில விவகாரங்கள் தொடர்பில் சர்வதேசம் விமர்சிக்கக் கூடிய அதிகாரம் அதற்கு கிடைக்கப் பெறக்கூடும். 

ஜி.எஸ்.பி. சலுகை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் தொடர்பில் காணப்படும் பயணத்தடை மேலும் நீடிக்கப்படக் கூடும். எனினும் அவர்கள் தமது தனிப்பட்ட தேவைக்காக யுத்தத்திற்குச் செல்லவில்லை.

 எனவே நாம் என்றும் அவர்களுடனிருப்போம். ஜி.எஸ்.பி. நீக்கப்படுமாயின் சுமார் 2000 கோடி வருமானம் அற்றுப் போகும். அரசாங்கத்தின் முட்டாள் தனமான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக  இராணுவத்தினர் மாத்திரமின்றி முழு நாடும் பாரியதொரு சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது என்றார்.