(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரிட்டன், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

கனடா

அந்தவகையில் இதுகுறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை, அவற்றை உறுதிசெய்வதில் சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்தல் மற்றும் எதிர்காலத்தில் மீறல்கள் இடம்பெறுவதைத் தடுத்தல் ஆகியவை தொடர்பில் செயலாற்றுவதில் மனித உரிமைகள் பேரவை முக்கிய பங்கை வகிக்கின்றது.

அதேவேளை இந்தத் தீர்மானம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்கும் ஆணையை மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கியிருக்கிறது. இது இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். அத்தோடு இது எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறையிலும் முக்கியமானதாக அமையும். இந்நிலையில் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் ஏற்கனவே இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஆக்கபூர்வமான செயன்முறையொன்றை முன்னெடுக்கவேண்டும் என்றும் கோருகின்றோம். இலங்கையில் வருங்காலத்தில் பாதுகாப்பையும் சமாதானத்தையும் வலுப்படுத்துவதை நோக்கிய முக்கிய படிக்கல்லாக இந்தத் தீர்மானத்தைக் கருதுகின்றோம். அதேவேளை அந்த இலக்கை அடைந்துகொள்வதற்குரிய செயன்முறைக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனி

அடுத்ததாக இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஹொல்கர் சோபேர்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவையே மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானம் வெளிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருப்பதுடன் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிரிட்டன்

மேலும் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் பிரிட்டனின் பொதுநலவாய நாடுகளுக்கான வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமட் அவரது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்:

இலங்கை தொடர்பில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுத்தல், மனித உரிமைகளை மேம்படுத்தல், நிலைபேறான அமைதியை உறுதிசெய்தல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு வாய்ப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.