(எம்.மனோசித்ரா)

காடழிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து 'சுவாசிப்பதற்கு இடமளியுங்கள்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று புதன்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது. 

கொழும்பு 7 இல் உள்ள விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நேற்று மாலை 3 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான துஷார இந்துனில் , நளின் பண்டார மற்றும் ஹெக்டர் அப்புஹாமி 'சுற்றாடல்' என்று சிங்கள மொழியில் எழுத்தப்பட்ட சவப்பெட்டியை சுமந்து சென்றவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அத்தோடு ஆதிக்குடிகளைப் போன்று வேடமிட்டிருந்த நபர்கள் சுற்றாடலை பாதுகாப்பதற்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதைப் போன்று நடனமாடினர்.

அத்தோடு விலங்குகளின் படங்கள் பதிக்கப்பட்டு 'எமது குடியிருப்புக்களை அழிக்காதீர்' என்ற வசனங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் ஏந்தியிருந்தனர். 

'எதிர்கால சந்ததியினருக்காக சுற்றாடலை பாதுகாப்போம்' , 'விலங்குகளின் இருப்பிடங்களை பாதுகாப்போம்' , 'சுற்றாடல் அழிவு தேசியத்திற்கு அச்சுறுத்தல்' , 'இன்று பாக்யா : நாளை உங்கள் மகள்' என்ற வசனங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

இதன் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில் ,

சுற்றாடலை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் மக்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளமை பெருமையளிக்கிறது. 

இந்த போராட்டத்தில் எவ்வித பேதமும் இன்றி மக்கள் எம்முடன் இணைந்துள்ளனர். இவ்வாறு எவ்வித பேதமும் இன்றி நாமனைவரும் ஒன்றிணைந்து இயற்கையை பாதுகாப்பதற்கு அழைப்பு விடுக்கின்றோம். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.

விடுதலைப்புலிகள் அமைப்பைப் போன்று , வனங்களை அழிக்கும் தீவிரவாதிகளையும் தோல்வியடைச் செய்வோம். ஆணைவிழுந்தான் , ஹோட்டன் சமவெளி, சிங்கராஜவனம், வில்பத்து, நக்கிள்ஸ் மலை என அனைத்தும் இன்று அபாயத்திலுள்ளன. 

ஆனால் இவை அனைத்தையும் பாதுகாப்பதற்கு நாம் முன்னின்று செயற்படுவோம். இதுபோன்ற அமைதியான போராட்டங்களை நாம் நாடு முழுவதும் முன்னெடுப்போம் என்றார். 

                                                                                                                                          

(படப்பிடிப்பு : தினெத் சமல்க)