(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கைக்கு எதிராக எவ்வித தடைகளையும் விதிக்க முடியாது. 

பாதுகாப்புசபையில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளால் மாத்திரமே இது தொடர்பில் தீர்மானிக்க முடியும். 

எனினும் அந்த நாடுகளில் வீட்டோ அதிகாரமுடைய பெரும்பாலான நாடுகள் எமக்கு ஆதரவானவை என்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சாட்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா. குழுவிற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை இணையவழியூடாக இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் கூறுகையில் ,

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையோ பொருளாதாரம் உட்பட தடைகளையோ  விதிக்க முடியாது. 

பாதுகாப்பு சபையிலேயே தடைகள தொடர்பில் தீர்மானிக்கப்படும். அதற்கு உண்மையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாதுகாப்புசபையில் அங்கத்துவம் வகிக்கின்ற வீட்டோ அதிகாரமுடைய நாடுகளில் பெரும்பாலானவை எமக்கு ஆதரவை வழங்கும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையிலிருந்த பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு தொடர்பான இராஜதந்திர அதிகாரி இது தொடர்பில் அறிக்கையொன்றினை சமர்ப்பித்திருந்தார். அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் கூறப்பட்ட கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகக் காணப்படுகின்றன.

பல தகவல்கள் திரிபுபடுத்தப்பட்டவையாகவுள்ளன. எனவே ஆதாரத்துடன் உண்மையான தகவல்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை உறுதியாகவுள்ளது. 

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாம் இது தொடர்பில் தீவிரமாக தயார்படுத்தல்களை முன்னெடுப்போம். நம்பகத்தன்மையுடைய தகவல்கள் என்று கூறப்படுபவை புலம்பெயர் புலிகள் அமைப்புக்களிடமிருந்து பெறப்பட்டவையா?

இலங்கைக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உலகிற்கு தெரியப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. 

உண்மையான ஆதரங்களை ஆராய்வதற்கு நியமிக்கபட்டுள்ள குழு இலங்கைக்கு விஜயம் செய்து சாட்சிகளை பெற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இலங்கை உள்ளக ரீதியில் ஆராய்ந்து உயர்மட்டத்தில் தீர்மானம் எடுக்கும். இக்குழுவை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானமும் அதன் போதே எடுக்கப்படும் என்றார்.