ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஒரு பில்லியன் ரூபா கோரி, தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கடந்த 15 ஆம் திகதி நடத்தப்பட்ட அரசியல் கட்சி கூட்டமொன்றில் சரத் பொன்சேகா, முத்தையா முரளிதரனின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டதாக தெரிவித்தே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில், ”முத்தையா முரளிதரன் என்ற ஒருவர் இருக்கின்றார் அல்லவா? அவர் மீது முன்னர் நாம் மிகுந்த பாசம் வைத்திருந்தோம்.

பந்து வீசும் போது, கண்களை மூடாது பார்த்துக்கொண்டிருப்போம். உணவு உண்பதற்கும், நீர் அருந்துவதற்கும் தேவையில்லை. தற்போது அவர் அந்த பந்தை மஹிந்த ராஜபக்ஷவின் ஆடைக்குள் வீசுகின்றார். அதற்கான காரணம் என்ன தெரியுமா?. 

முத்தையா முரளிதரனுக்கு வெலிகந்த பகுதியில் 2000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. நான் வனவிலங்கு அமைச்சராக இருந்த கால கட்டத்தில் நான் அந்த காணியை பார்க்க சென்றேன். அந்த பகுதியில் இடங்களை மறித்து, வேலி அமைத்துள்ளார். 

அதற்குள் சில விடயங்களை காண்பிக்க டிக்கட்களை அறவிடுகின்றனர். யானை ஒன்றுக்கு கூட அந்த பக்கமாக செல்ல முடியாது. இவ்வாறான வேலைகளை செய்பவர்களே, சூழலை பாதுகாக்கின்றோம் என கூறுகின்றார்கள்” என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த கருத்திற்கு எதிராகவே முத்தையா முரளிதரன், ஒரு பில்லியன் ரூபா கோரி, சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.