மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

பெப்பரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான பொது மக்களின் எதிர்ப்பினை ஒடுக்குவதற்காக மியன்மார் இராணுவத்தினர் மேற்கொண்ட இரத்தக்களரி ஒடுக்குமுறையினை இது வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

செவ்வாயன்று படையினர் கின் மியோ சிட் என்ற குறித்த சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து, அவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்ட தருணத்தில் சிறுமி, தனது தந்தையின் மடியில் அமர்ந்திருந்ததாக கின் மியோ சிட் இன் சகோதரி மியான்மாரின் நவ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

அதேநேரம் தனது 19 வயது சகோதரனை துப்பாக்கியால் தாக்கி கொண்டு சென்றதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து இராணுவத்தினர் உடனடியாக எக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை. எனினும் ஒரு குழந்தையை தனது தந்தையின் கைகளில் வைத்து இரக்கமின்றி கொல்வது மியான்மரின் பாதுகாப்புப் படையினரின் துஷ்பிரயோகம் மற்றும் கண்மூடித்தனமான வன்முறையைப் எடுத்துக் காட்டுகிறது.

இராணுவ செய்தித் தொடர்பாளர் சாவ் மின் துன் செவ்வாயன்று, இதுவரை பதிவான உயிர் இழப்பு குறித்து வருத்தத்தை தெரிவித்ததோடு, மொத்தம் 164 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

எனினும் மியன்மாரின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம், சதித்திட்டத்திற்கு பிந்தைய மியான்மரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 275 ஆக பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.