இந்தியா முழுவதும் அண்மைய நாட்களில் கொவிட் -19 நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் ஹோலி உள்ளிட்ட வரவிருக்கும் பண்டிகைகளுக்கான பொது கொண்டாட்டம் மற்றும் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

மறுபுறம், உத்தரபிரதேச அரசு வயோதிப பிரைஜகள் மற்றும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் கொண்டாட்டங்களிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மேலும் அனுமதியின்றி ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 ஐ திறம்பட கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதுடன், ஏப்ரல் 1 முதல் அவை நடைமுறைக்கு வரவுள்ளது.

இந் நிலையில் சர்வதேச விமான போக்குவரத்தின் இடைநீக்கம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விமான போக்குவரத்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அறிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும்” என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 47,262 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,17,34,058 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது. 

நாட்டில் தொற்று காரணமாக மொத்த இறப்புகள் 1,60,441 ஆக உயர்ந்துள்ளன. இதற்கிடையில், நாட்டில் செயலில் உள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,68,457 ஆகவும், மீட்பு விகிதம் மேலும் 95.67 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனா தொற்றில் ஒரு மைல்கல்லை எட்டிய இந்தியா, இதுவரை 5 கோடிக்கும் அதிகமான கொவிட் -19 தடுப்பூசியை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்தகது.