(செ.தேன்மொழி)

கொழும்பு - சங்கராஜா மாவத்தை பகுதியில் சிற்றுண்டிச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி அதன் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கராஜா மாவத்தை பகுதியில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையில் இன்று காலை ஆறு மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தீயணைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சிற்றுண்டிச்சாலையின் சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன் , இதன்போது சிற்றுண்டிச்சாலையின் ஊழியர் ஒருவர் தீக்கிரையாகி நிலையில் , கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

பலபிட்டி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய கே.ஜீ. லசந்த எனப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.  

இதன்போது தீயை கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்