தனது மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுகள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வின் போது இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இஸ்லாமாபாத்தின் மோசமான மனித உரிமைப் பதிவுகள் குறித்து ஐ.நா அமைப்பு அவசர கவனம் செலுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் விடயத்தில் தோல்வியுற்ற பாக்கிஸ்தான் அரசாங்கம் அறிவுரை வழங்குவதை நிறுத்துவதோடு  பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும் என்றும் இந்தியா சுட்டிக்காட்டியது. 

ஐக்கிய நாடுகளுக்கான (ஜெனீவா) இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலுவலகத்தின் முதற்செயலாளர் பவன்குமார் பாதே இதுதொடர்பில் கூறுகையில்,

பாகிஸ்தானில் அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உட்பட மிகக் கடுமையான சட்டங்களின் கீழ் குறிவைக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார். 

அத்துடன் பாக்கிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பிரசாரம் செய்தவரும் மற்றும் வலிந்து காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்தவருமான இஸ்மாயில் என்ற பெண் மனித உரிமைகள் பாதுகாவலரின் வழக்கை தொடர்பாகவும் பவன்குமார் பாதே எடுத்துரைத்தார்.

அதன்போது இஸ்மாயில் மீது தேசத் துரோகம், பயங்கரவாதம் மற்றும் அவதூறு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமையால் அவர் பாகிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. அவரது தந்தை முஹம்மது இஸ்மாயில் சமீபத்தில் ‘பயங்கரவாத’ குற்றச்சாட்டின் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்விதமான பாகிஸ்தானின் மோசமான நடவடிக்கைகள் சம்பந்தமாக பல்வேறு சிவில் அமைப்புக்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமையை மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

“பயங்கரவாதத்தை தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் அதன் அரசால் வழங்கப்பட்ட மற்றும் அதன் மக்களின் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதற்கு பொறுப்புக் கூற வேண்டிய நேரம் இதுவாகும். மனித உரிமைகளை நிலைநாட்டுதல் விடயத்தில் தோல்வியுற்ற பாக்கிஸ்தான் அரசு அறிவுரை வழங்குவதை நிறுத்தி பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பொறுப்புக்கூறும் அதனுடைய கடமை குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

பலூசிஸ்தான் இப்போது ‘காணாமல் போனவர்களின் நிலம்’ என்றே அறியப்பட்டுள்ளதாக கூறிய பவன்குமார் பாதே காணமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது என்றும் அவர் வினாத்தொடுத்தார்.

“பாதிக்கப்பட்ட குழுக்களின் கூற்றுப்படி, 2000 ஆம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான நபர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன நபர்களின் குடும்பங்கள் தங்களின் உறவுகளைக் கண்டறிவதற்காக தொடர்ந்து போராடுகின்றன. இந்த குடும்பங்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கடந்த மாதம் இஸ்லாமாபாத்தில் 10 நாள் தொடர் போராட்டம் நடத்தியிருந்தனர் என்றும் பவன்குமார் பாதே குறிப்பிட்டார். 

பாக்கிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கட்டாயமாக காணாமல் போகும் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்று சுட்டிக்கூறிய பவன்குமார் பாதே ‘கைபர் பக்துன்க்வா நடவடிக்கை கட்டளைச் சட்டப் பிரகடனத்திற்குப் பின்னர் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எல்லையற்ற தவறான அதிகாரங்களை அளிக்கிறது. இதில் விசாரணையின்றி மக்களைத் தடுத்து வைக்கும் அதிகாரம் உள்ளிட்ட தெளிவற்ற முறையில் வரையறைகள் செய்யப்பட்டுள்ள அதிகாரங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார். 

இதேவேளை கடத்தப்பட்டு  சங்கிலியால் பிணைக்கப்பட்டுää திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட 'அர்சூ ராசா” என்ற 12 வயது சிறுமி எதிர்கொண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ள பவன்குமார் பாதே கிறிஸ்தவää இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் பாகிஸ்தானில் வலுவகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் ஜனவரி மாதம் சிறுபான்மையாக இருக்கும் ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த 11 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தையும் பவன்குமார் பாதே இதன்போது சுட்டிக்காட்டினார்.

“செப்டம்பர் 2020 இல் கராச்சியில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடி, ஷியா முஸ்லிம்களை மதவெறியர்கள்’ என்று அறிவிக்க வேண்டும் அவர்களின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோசங்களை எழுப்பினார்கள். 

இவ்விதமான நிலைமைகள் அங்கு காணப்பட்டாலும் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடும் போர்க்குணமிக்க குழுக்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு ஊடகங்களுக்கு மிகப்பெருந் தடைகள் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் என்று பவன்குமார் பாதே இறுதியாகத் தெரிவித்தார்.