(எம்.மனோசித்ரா)

சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற பிரதான நபராக நான் மாத்திரமே காணப்படுவதைப் போன்று சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளை முறையாக முன்னெடுப்பதன் மூலம் சூழலை இலகுவாக பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று இவ்வாறான பிரசாரங்களை பரப்புபவர்களிடம் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

குப்பை மலைகள் நிறைந்த இடமாக  காணப்பட்ட கொழும்பை குறுகிய காலத்தில் அழகிய நகரமாக நாமே மாற்றினோம் என்பதை தற்போது என்னை அதிகமாக விமர்சிக்கும் கொழும்பு மக்கள் நன்று அறிவர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுபீட்சத்தின் கொள்கை திட்டத்திற்கு அமைய இன்று திங்கட்கிழமை 'நதிகளை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் மாணிக்க கங்கைக்கு அருகில் றுஹூணு கதிர்காம புனித தலத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

சர்வதேச நீர் தினமான இன்று 'நதிகளைப் பாதுகாப்போம்' வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று சுற்றாடல் பாதுகாப்பு பெருமளவானோர் மத்தியில் பிரதான பேசு பொருளாகியுள்ளது. சுற்றாடலில் நீர் முக்கியத்துவமுடைய காரணியாகவுள்ளது. இலங்கையில் காணப்படுகின்ற 103 நதிகள் பெறுமதிவாய்ந்தவையாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் வௌ;வேறு நிலைப்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இதனூடாக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக ஊடகங்கள் ஊடாக பாரியவில் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நான் செயற்பட்ட போது சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற பிரதான நபராக நான் மாத்திரமே காணப்படுவதைப் போலவே சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் மாத்திரம் மரங்களை வெட்டுவதைப் போலவும் ஏனைய அனைவரும் சுற்றாடலை பாதுகாப்பவர்களைப் போலவும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

ஒவ்வொருவரும் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றுவார்களாயின் சுற்றாடலை பாதுகாப்பது இலகுவானதாகும் என்று சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களிடம் தெரிவிக்கின்றேன். மக்களால் இழைக்கப்படும் தவறுகளாலேயே பணத்தை செலவிட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நாட்டை பொறுப்பேற்கும் போது தற்போது எம்மை அதிகளவில் விமர்சிக்கும் கொழும்பு வாழ் மக்களுக்கு கொழும்பில் எவ்வாறு குப்பை மலைகள் குவிந்திருந்தன என்பது நன்றாகத் தெரியும். அவற்றை அப்புறப்படுத்த முடியாது என்று சிலர் கூறினர். எனினும் நாம் குறுகிய காலத்தில் அவற்றை அப்புறப்படுத்தி அழகான சூழலை உருவாக்கினோம்.

30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொழும்பிற்குள் முறையற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் , பதுங்கு குழிகள், நிலத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட முள்வேலிகள், சுவர்கள் என்பவற்றால் கட்டட (கொங்ரீட்) வனங்கள் உருவாகியிருந்தன. அன்று காணப்பட்ட அநாகரிகமான நிலைமையை எம்மால் மாற்றியமைத்து இயற்றை சூழலை உருவாக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் எமக்கு முடியுமாக இருந்தது.

சுற்றாடல் என்பது மக்களுக்கு வாழ்வதற்கு ஏற்றவகையில் அமைய வேண்டும். முன்னர் சுதந்திர சதுக்க வளாகம் உள்ளிட்டவை எவ்வாறு சிதைவடைந்து காணப்பட்டன என்பதை சகலரும் அறிவர். எனினும் அவற்றை நாம் மீள் நிர்மாணம் செய்து அவற்றை அழகுபடுத்தினோம். நிலையான சூழல் அபிவிருத்திகளை உருவாக்கினோம்.

பரம்பரையாக விவசாயம் முன்னெடுக்கப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருந்தால் அவற்றை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்நடவடிக்கை மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பிழையான வகையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் எந்த சந்தர்ப்பத்திலும் மரங்களை வெட்டி சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தமாட்டார்கள்.