(இராஜதுரை ஹஷான்)
மரண தண்டனை கைதி  துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி  பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்களுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என கிராமிய , பிரதேச குடிநீர் வழங்கள் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டமை குறித்து பாரிய சந்தேகம் காணப்படுகின்றன. தீர்வு வழங்கப்படுவதற்கு முன்னர் அரசியல்வாதிகள் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கலந்துரையாடியமை  குரல் பதிவுகள்  ஊடாக வெளியாகின.

  துமிந்த சில்வாவிற்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்கள். மரண தண்டனை தீர்ப்பு அரசியல் காரணிகளையும், தனிப்பட்ட பழிவாங்களையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே மரண தண்டனை தீர்ப்பினை மீள்பரிசீலனை செய்யுமாறும்  கோரிக்கை விடுத்துள்ளோம்

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்கு முத்துறை அதிகாரத்தையும் பயன்படுத்தியது. அரச அதிகாரிகள் பலர்  அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தப்பட்டார்கள். சட்டமாதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு  அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை  ஆதார பூர்வமாக வெளியாகின.

அரசியல் பழிவாங்கள் தொடர்பிலான  ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் அறிக்கை  சமர்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்களினால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள்  அனைவருக்கும் நியாயம் வழங்கப்படும் அத்துடன் அரச அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.