இந்தியாவின் திடீர் நகர்வுகள்

By J.G.Stephan

22 Mar, 2021 | 11:17 AM
image

-ஹரிகரன்
கொரோனா தொற்றுக்குப் பின்னர் கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்ற கோபால் பாக்லே, வடக்கு, கிழக்கு, மலையகம் என, இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடைய பகுதிகளில் சுற்றிக் கொண்டு வந்திருக்கிறார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனி விமானத்தில் வந்திறங்கி, சுயதனிமைப்படுத்தலில் இருந்த பின்னர் தான், கடந்த ஆண்டில் அவர் பணிகளைப் பொறுப்பேற்றிருந்தார். கொழும்பில் இறங்கி, 10 மாதங்களுக்குப் பின்னரே, அவர் வடக்கு, கிழக்கை முதல்முறையாக எட்டிப் பார்த்திருக்கிறார்.

கொரோனா தொற்றுச் சூழல் அவரை சூழ்நிலைக் கைதியாக தடுத்து வைத்திருந்திருக்கலாம். அது போலவே தற்போதைய சூழ்நிலை அவரைத் தொடர்ந்தும் கொழும்புக்குள் முடங்கிக் கிடக்காமல், வெளியே வரும் நிர்ப்பந்தத்தையும் கொடுத்திருக்கலாம். திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி வழிபாடுகளில் தொடங்கி, சேது அணைக்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட அவர், யாழ்ப்பாணத்தில் அரசியல் தலைவர்கள் தொடக்கம், வர்த்தப் பிரமுகர்கள் வரை சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்.

கிழக்கிலும் அதுபோலவே சந்திப்புகளை நடத்தி எல்லா தரப்பினதும் கருத்துக்களை உள்வாங்கியிருக்கிறார். அதற்கு அப்பால் அவர் கரிசனை செலுத்திய விடயங்கள் பல. அவை அனைத்தும் இலங்கையில் குறிப்பாக, வடக்கு, கிழக்கில் இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்தும் திட்டங்கள் அல்லது இந்தியாவினால் உதவி அளிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் திட்டங்களாகும்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, யாழ்ப்பாண கலாசார நிலையம்,  திருகோணமலையில் சீனக்குடா எண்ணெய் களஞ்சிய தொகுதி, சம்பூரில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள சூரியகல மின்சக்தி திட்டத்துக்காக முன்மொழியப்பட்ட இடம் என்று இந்தியத் உயர்ஸ்தானிகர் பம்பரமாகச் சுற்றி பார்வையிட்டிருக்கிறார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை, இலங்கை அரசு மீறிய பின்னர், இருதரப்பு உறவுகள் கேள்விக்குள்ளாகியிருந்தன.

அதற்குள் மேற்கு முனையத்தை அதானி குழுமத்துடன் சேர்ந்து அபிவிருத்தி செய்யவுள்ளதாக, இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்ட கதையால் மீண்டும் முரண்பாடுகள் தோன்றின. மேற்கு முனையத்தில் 85 சதவீத உரிமை இந்தியாவுக்கு கொடுக்கப்படும் என்று கூறிய அரசாங்கம், 51 சதவீத உரிமையை மட்டும் கொடுக்க இப்போது முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் கூட நிரந்தரமல்ல.

மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க இன்னமும் இணக்கம் ஏற்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பது, இதுவும் இந்தியாவின் கைக்கு கிட்டுமா அல்லது ஏமாற்றம் தான் மிஞ்சுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குள் அமைச்சர் உதய கம்மன்பில, மற்றொரு பக்கத்தில் இந்திய நிறுவனத்திடம் உள்ள சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் விரைவில் இலங்கையின் வசமாகும் என்றும், அதற்கு இந்தியா இணங்கி விட்டதாகவும் புரளியைக் கிளப்பினார். அதனை மறுத்த இந்தியா அவ்வாறான எந்த இணக்கமும் ஏற்படவில்லை என்று கூறியிருந்தது.

இன்னொரு பக்கத்தில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தும் போதெல்லாம், அதனை செய்ய முடியாது என்றும் அவ்வாறு உத்தரவிட இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை என்றும், கொதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right