ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல என்றும் சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நாட்டை ஆட்சி செய்ய வெண்டுமென்ற தேவை இருந்தபோதும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தான் ஜனாதிபதி என்ற வகையில் ஊடகத் துறைக்கு எவவித அழுத்தங்களையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி , பல்வேறு குழுக்கள் மற்றும் ஆட்களின் தேவையின் பேரில் பிழையான ஊடக பயன்பாட்டில் ஈடுபட்டு நாட்டையும் மக்களையும் மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முயற்சித்தால் அத்தகையவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்நிற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடக குழுவொன்று ஊடக நிறுவனங்களுக்குள் நுழைந்து தேசியத்திற்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் எதிராக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நேற்று முற்பகல் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான யோம்புவெல்தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ 15 ஆவது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி  இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தது நாட்டை கட்டியெழுப்புவதற்காகவாகும். 60 மாதங்களைக்கொண்ட பதவிக் காலத்தில் 16 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. 

இன்னும் குறிப்பிடத்தக்க காலம் உள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றி சிலர் குழப்பமடைந்துள்ளனர். அதுபற்றி எவரும் குழப்பமடையத் தேவையில்லை. என்பதுடன், அதனை தீர்மானிப்பது மக்களேயாகும். எஞ்சியுள்ள பதவிக் காலத்தில் தேசிய பொருளாதாரத்தையும் கிராமிய மக்களையும் முன்னேற்றுவதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் பொறுப்பு மக்களின் வாழ்க்கைக்கான வழிகளை செய்து கொடுப்பதாகும். ஒருபோதும் அவர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கக்கூடாது. மக்கள் வாழ்க்கை நிலைமைகளை பாதிக்கும் வகையிலான எவ்வித செயற்பாடுகளையும் அரச அதிகாரிகளிடம் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நான் ஒருபோதும் சுற்றாடலுக்கு அழிவை ஏற்படுத்தவில்லை. நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப் பகுதி முதல் சுற்றாடல் பாதுகாப்பிற்காக எவருமே செய்யாத பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். சுதந்திர சதுக்கம் கூட அன்று குப்பை மேடாக காணப்பட்டது. அந்த நிலைமையை இல்லாமல் செய்து கொழும்பு நகரத்தை பசுமை பூங்காவாக மாற்றினேன்.  சுற்றாடலுக்காக எதையுமே செய்யாதவர்கள் என்னை நோக்கி விரல் நீட்டுவது கவலைக்குரியதாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் இருந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஹந்தானையில் 30 ஏக்கர் காணியை தனது மகளுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்திருந்தால் இன்று அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து அழுது புலம்ப வேண்டி இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

2015 – 2019 காலப் பகுதியில் குருணாகலை மாவட்டத்தில் 77 ஏக்கர் வனப் பகுதியும் புத்தளத்தில் 258 ஏக்கரும் மொனராகலையில் 100 ஏக்கரும் அனுராதபுரத்தில் 224 ஏக்கரும் உட்பட மைலேவ, மாத்தளை, லக்கலை, ரிதிகம, வெலிகன்ன உள்ளிட்ட பல பகுதிகளில் காடழிப்பு இடம்பெற்றுள்ளது. அத்தகையவர்கள் இன்று அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டுவது கேலிக்குரியதாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வறுமையை ஒழித்து கிராமிய மக்களை பொருாளதார ரீதியாக முன்னேற்றவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும். 75 வீதமாக உள்ள கிராமிய மக்களில் 35 வீதமானோர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி கிராமிய மக்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவம் ஜனாதிபதி தெரிவித்தார்.

சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 35,000 பேருக்கு தற்போது தொழில்கள் வழங்கபபட்டுள்ளன. ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை வழங்கும் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மேலும் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதற்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்யும்போது சரியான ஆட்களை இனங்காண்பது கிராமிய அரச அதிகாரிகளினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

பயிற்றப்பட்ட ஊழியர்கள் இல்லாதிருப்பது நாட்டின் அபிவிருத்தித்திட்டங்கள் தாமதமடைவதற்கு காரணமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகல் மற்றும் காலி மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். 

தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.