-கார்வண்ணன்

ஜெனிவா தீர்மானத்தை நட்பு நாடுகளுடன் சேர்ந்து தோற்கடிப்போம் என்று சூளுரைத்துக் கொண்டிருந்த அரசாங்கத் தலைவர்கள் இப்போது, அதனை எதிர்கொள்வது கடினம் என்று கூறும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

இவ்வாறு வீராப்புத்தனமாக கதை பேசியவர்களில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் ஒருவர்.

அவர், திருகோணமலையில் வெளியுறவு அமைச்சின் பிராந்திய கொன்சூலர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது, சர்வதேச சமூகத்தின் ஆதரவை அரசாங்கம் இழக்கும் வகையில் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் செயற்படக் கூடாது கூறியிருக்கிறார். எச்சரிக்கையாகவும் கூறியிருக்கலாம், கோரிக்கையாகவும் முன்வைத்திருக்கலாம்.

எவ்வாறாயினும், அவரது இந்தக் கருத்து பொருத்தமற்ற தருணத்தில், பொருத்தமற்ற தரப்பை நோக்கி முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் தொடங்கி, கடந்த நாட்களாக மட்டக்களப்பு, பாண்டிருப்பு, நல்லூரில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டங்கள், பேரணிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களினால் எதனைச் சாதித்தோம் என்ற கேள்வி பலரிடம் இருந்தது. அந்தக் கேள்விக்கான பதில் தினேஷ் குணவர்த்தனவின், மேற்படி கருத்திலேயே ஒளிந்திருக்கிறது. 

இத்தகைய போராட்டங்கள் சர்வதேச அளவில் அரசாங்கத்துக்கான ஆதரவை இழக்கச் செய்வதாக, அதனை பலவீனப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கிறது. அரசாங்கத்தின் நிலையை அசைத்துப் பார்க்கின்றதாக இந்தப் போராட்டங்கள் இடம்பெறுவதால் தான், அவர் இவ்வாறான ஒரு கருத்தை எச்சரிக்கையாகவோ, வேண்டுகோளாகவே முன்வைக்க முனைந்திருக்கிறார்.

அதேவேளை, அவர் வெளிவிவகார அமைச்சராக இருந்தும், ஜெனிவா தீர்மானம் எவ்வாறு இறுக்கமடைந்தது என்பதை, இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்பதை நன்றாகவே உணர முடிகிறது.

முன்வினைகளின் விளைவு தான் இந்த தீர்மானம். தமிழர் தரப்பை பொறுத்தவரையில் இந்த தீர்மானம் கனதியானதாக, இறுக்கமானதாக இல்லாவிடினும், முன்வரைவை விட, இறுதி வடிவம் கனதியாக அமைந்தமைக்கு முழுக்காரணமே அரசாங்கம் தான். இந்த தீர்மானத்தில், போர்க்கால மீறல்கள், அதற்கான பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்களை விட்டு விடலாம்.

அவை தமிழர் தரப்புடன் மட்டும் தொடர்புபட்டவை. அவற்றை அரசாங்கம் தீர்க்கப் போவதுமில்லை. இணங்கப் போவதுமில்லை. அதற்கு அப்பால் இடம்பெற்றுள்ள எத்தனையோ விடயங்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயல்களின் எதிர்வினைகள் தான்.

பொறுப்புக்கூறல் விவகாரங்கள் இருக்க, அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை, அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அதனை கடந்த 12 ஆண்டுகளாக திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. மைத்திரி - ரணில் கூட்டு அரசும் அதனைச் செய்யவில்லை.

தற்போதைய அரசும் அதிகாரப்பகிர்வு என்பதை பிரிவினையாகவே பிரசாரம் செய்து, அத்தகைய முயற்சிகளை தோற்கடிக்க முயன்றது. குறைந்தபட்சம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிப்படி 13 ஆவது திருத்தச் சட்டத்தையாவது நிறைவேற்றியிருக்க வேண்டும்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களைப் பறித்துக் கொண்ட அரசாங்கம், மாகாண சபைகளே தேவையில்லை, அவற்றுக்குத் தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்றும் செயற்படத் துணிந்தது.

இதன் விளைவாகவே, இந்த முறை ஜெனிவா தீர்மானத்தில் இந்த விவகாரம் இடம்பெற்றிருக்கிறது. இதுவரையில்லாத வகையில், ஜெனிவா தீர்மானத்தில் 13 ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எந்த வகையில் தமிழ் மக்கள் பொறுப்பாக முடியும்? அரசாங்கம் செய்த தவறின் விளைவே இது. 13 ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல்கள் என்பனவற்றை விட, எந்த அதிகாரப் பகிர்வையும் வழங்குவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

அதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். கலாநிதி தயான் ஜயதிலக அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள ஒரு பத்தியில், “ஜெனிவாவில் இழக்கப்படும் ஒவ்வொரு வாக்கிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறு பொறுப்பாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.