கொழும்பு, இரத்மலானை பகுதியில் காணாமல்போனதாக கூறுப்பட்ட 16 வயதுடைய சிறுவன் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்றிரவு 10 மணியளவில் தனது மகன் வீட்டிற்கு வருகைத் தந்ததாக சிறுவனின் தாயார் கூறினார்.

தனக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதை அடுத்து, தான் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை - தஹாம் மாவத்தையில் வசித்து வந்த  எல்டன் டெவோன் கெனி எனப்படும் 16 வயதுடைய மாணவன் கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை காணாமல் போயுள்ளதாக அவரது தயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தார்.

காணாமல் போயுள்ள சிறுவனின் தந்தை வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதுடன் , அவர் தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் , தரம்-11 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன் காணாமல்போன தினத்தன்று பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து கருப்பு நிற ஆடையணிந்து வெளியேறியதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்காக காரணம் குறித்து மகன் தன்னிடம் எதனையும் அறிவிக்கவில்லை என்று தாய் தெரிவித்துள்ளார். 

குறித்த மாணவனை கண்டுபிடிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.