புத்தபெருமான், திரிபீடகம் மற்றும் பௌத்த புண்ணிய தலங்கள் குறித்து தவறான கருத்துக்களை பரப்புவோர் குறித்து கண்டறிய குழு

By Vishnu

21 Mar, 2021 | 08:32 AM
image

புத்த பெருமான், திரிபீடகம் மற்றும் பௌத்த புண்ணிய தலங்கள் தொடர்பில் பிழையான வியாக்கியானங்களை செய்து தவறான கருத்துக்களை பரப்புவோர் குறித்து கண்டறிந்து அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பௌத்த ஆலோசனை சபை நேற்றுமுன்தினம் 9 ஆவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வேளையில் மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மகா நாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் முன்வைத்த எழுத்து மூலமான கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த குழுவை உடனடியாக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தொல்பொருள் சக்கரவர்த்தி சங்கைக்குரிய எல்லாவெல மேதானந்த தேரர், வித்தியோதய பிரிவெனாதிபதி சங்கைக்குரிய பலங்கொட சோபித்த தேரர், அஸ்கிரிய பீடத்தின் பிரதி பதிவாளர் சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர், சியம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர், ராமான்ஞ்ய மகா நிக்காயவின் சங்கைக்குரிய மெதகமுவே விஜயமைத்ரி தேரர், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் மிரிசவெட்டிய விகாராதிகாரி சங்கைக்குரிய ஈத்தல வெட்டுனுவெவே ஞானதிலக்க தேரர், பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபய திஸ்ஸ தேரர், பேராசிரியர் சங்கைக்குரிய இர்துராகாரே தம்மரத்தன தேரர், கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தேரவாத பௌத்தத்தின் முக்கிய இடமாகும். பௌத்த சமயத்தை சேர்ந்த சில மோசடிகாரர்கள் மற்றும் மோசடியான போலி பிக்குகள் பௌத்த அடிப்படை போதனைகளை திரிபுபடுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். தூய்மையான தேரவாத பௌத்த சமயத்தை அழிக்கும் இந்த திட்டமிட்ட சூழ்ச்சியை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும். தவறான கருத்துக்களை உடையவர்களை அறிவுபூர்வமாக தோல்வியடையச் செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று அவசியமாகும் என்றும் மகாசங்கத்தினர் வலியுறுத்தினர்.

2600வது சம்புத்த ஜயந்திக்காக முன்மொழியப்பட்ட பௌத்த நூல்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வருவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வரைபினை மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பித்து ஒரு மாத காலப் பகுதியில் திருத்தங்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு தொல்பொருள் கட்டளை சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

எமது நாட்டின் பல தொல்பொருள் சின்னங்கள் பௌத்த மரபுரிமைகளாகும். தொல்பொருள் ரீதியான ஒரு நாணயமாக அல்லது ஒரு பண்டையப் பொருளாக மட்டும் அதனை பார்ப்பது பொருத்தமானதல்ல என சுட்டிக்காட்டிய மகா சங்கத்தினர், தீர்மானங்களை மேற்கொள்ளும்போது குறித்த நிக்காயக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

ஆரன்ய சேனாசனக்களை பராமரிப்பதில் பிக்குகளுக்கு அரச அதிகாரிகளினால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த மகா சங்கத்தினர், தேரர்கள் சுதந்திரமாக ஆரன்ய சேனாசனக்களில் வாழ்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டனர்.

சுற்றாடலையும் ஏனைய ஜீவராசிகளையும் பாதுகாப்பதற்கு பண்டைய காலத்திலிருந்தே மகாசங்கத்தினர் மிகுந்த அர்ப்பணிப்பை செய்துள்ளனர். பிக்குகளினால் ஒருபோதும் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதுடன், எவரும் சுற்றாடலை அழிப்பதற்கு தேரர்கள் இடமளிப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

நாட்டின் சனத்தொகையில் 75 வீதமாகவுள்ள கிராமிய மக்கள் நீண்டகாலமாக பல்வேறு பொருளாதார, சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து கிராமங்களுக்கு சென்று ஜனாதிபதி மேற்கொண்டு வரும் முன்னுதாரணமான பணியை பாராட்டிய தேரர்கள், இந்த செயற்பாட்டிற்கு எதிராகவும் சிலர் முன்னெடுத்து வரும் போலி பிரச்சாரங்கள் காரணமாக கிராமங்களுக்கு செல்வதை நிறுத்திவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

தற்போதைய அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக பெரும்பாலான மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். மக்கள் அங்கீகரித்த அந்த கொள்கைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். தன்னைப் பாதுகாப்பதன்றி மக்கள் அங்கீகரித்த கொள்கையை பாதுகாப்பதே அவசியமாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது இந்த கொள்கைகளுக்கு எதிராகவாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்காக சிலர் பெருந்தொகையான பணத்தை செலவிட்டு வருவதாகவும், இந்த சூழ்ச்சி குறித்து விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பெளத்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களான மகா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, விஜித்த பேருகொட, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right