(செ.தேன்மொழி)

சித்திரை புத்தாண்டு பண்டிகை காலத்தின் போது இடம்பெறும் வீதி விபத்துகளை தடுக்கும் வகையில் இன்று முதல், ஒரு மாத காலத்திற்கு விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

நாட்டில் பண்டிகை காலங்களில்  போதே அதிகளவான வீதி விபத்துகள் பதிவாகி வருகின்றன. 

அதற்கமைய எதிர்வரும் சித்திர புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் ஒரு மாதகாலம் மேற்கொள்ளப்படவுள்ள இந்த சுற்றிவளைப்பின் போது, மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் , பரிசோதனை ஊது குழாய்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் , இத்தகைய குழாய்கள் 65 ஆயிரம் வரை பொலிஸ் தலைமையகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையும் பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்காகவும் ஒரு கருவியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , அது தொடர்பான பரிசோதனைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. 

அந்த கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்னர்,இத்தகைய போதைப் பொருட்களை பயன்படுத்தியுள்ளதாக யாராவது சாரதியொருவர் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்பட்டால் , அவரை சட்டவைத்தியர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி அவரது குருதி மற்றும் சிறுநீரகம் தொடர்பில்  பரிசோதனைகளை முன்னெடுத்து உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் பஸ் உள்ளிட்ட வாகனங்களை பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்துவதற்காக வழங்கிவரும் நிறுவன உரிமையாளர்கள் , பணிப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் , தங்களது சாரதிகளுக்கு அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும்.  அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.