(செ.தேன்மொழி)

இரத்மலானை பகுதியில் காணாமல்போனதாக கூறப்படும் 16 வயதுடைய எல்டன் டெவோன் கெனி என்ற மாணவனை கண்டுபிடிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் , இது வரையில் 8 பேரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

இரத்மலானை - தஹாம் மாவத்தையில் வசித்து வரும் 16 வயதுடைய எல்டன் டெவோன் கெனி எனப்படும் 16 வயதுடைய மாணவன் கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை காணாமல் போயுள்ளதாக அவரது தயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

காணாமல் போயுள்ள மாணவனின் தந்தை வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதுடன் , அவர் தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் , தரம்-11 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன் காணாமல்போன தினத்தன்று பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து கருப்பு நிற ஆடையணிந்து வெளியேறியதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்காக காரணம் குறித்து மகன் தன்னிடம் எதனையும் அறிவிக்கவில்லை என்று தாய் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய , மாணவன் காலி - கொழும்பு பிரதான வீதியில் மொரட்டுவ பகுதியை நோக்கி நடந்து செல்லும் காட்சி சி.சி.ரி.வி. காணொளி பதிவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாணவனை கண்டுபிடிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாணவன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் 077-3774850 என்ற இலக்கத்தை தொடர்புககொண்டு தெரிவிக்கமுடியும்.