நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் கலந்தாலோசனைச் செயலணியின் அமர்வுகள் யாவும் நிறைவு பெற்றுள்ளதுடன் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட மக்களின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்திடம் இந்த மாத இறுதியில் கையளிக்கவுள்ளதாக நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசணைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 

மக்கள் கருத்தறியும் இந்த செயலணியின் அமர்வு கல்முனை கிறிஸ்டா இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாக்கிசோதி சரவணமுத்து குறிப்பிடுகையில்,

பிரதேசம், மாவட்டம், மாகாணம், தேசியமட்டம் என எமது மக்கள் கருத்து அறியும் செயலணியினர் மக்களைச் சந்தித்து அவர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்து வருவதுடன் மக்களும் பெருமளவு ஆர்வத்துடன் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கடந்த காலங்களில் இந் நாட்டில் ஏற்பட்ட துன்பகரமான நிலைமைக்கு நல்லிணக்கத்தினூடாக எவ்வாறு தீர்வினைக் காணலாம் என்பதே எமது நோக்கமாகும். 

நாட்டு மக்களிடம் பதிவு செய்யப்படும் கருத்துக்களானது எந்தவித அரசியல் அழுத்தங்களும் இன்றி வெளிப்படைத்தன்மையாக அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம். எமது இந்த அறிக்கையில் மக்கள் பொறிமுறை தொடர்பான திட்டம் உள்ளடக்கப்படும். இச் செயலணி பொறுப்புக்கூறலுக்காக விசேட நீதிமன்றக் கட்டமைப்பு, விசேட சட்ட அலுவலகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றைக் கொண்டதாக அமைவதுடன் இம்மாத அமர்வுகள் நிறைவு பெற்றதன் பின்னர் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்றார்.