வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை - ஹர்ஷ டி சில்வா

19 Mar, 2021 | 08:17 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திடம் எதிர்வரும் மாதங்களில் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதற்கான நிதி இல்லை. அத்தோடு தனியார் துறை மற்றும் வங்கிகள் மீள செலுத்த வேண்டிய கடன் தொகை அரசாங்கத்தினால் செலுத்தப்படவுள்ள கடன் தொகையை விட பன்மடங்கு அதிகமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தற்போது அமெரிக்க டொலரின் பெறுமதி 203.15 ரூபாவாகும். இந்நிலையில் எதிர்வரும் மாதங்களில் மீள செலுத்த வேண்டிய கடனுக்காக டொலர்கள் அரசாங்கத்திடமில்லை.

சீனாவிடமிருந்து கிடைக்கப் பெறவுள்ளதாகக் கூறிய ஒன்றரை பில்லியனும் கிடைக்கப் பெறாமல் போயுள்ளது. அவ்வாறு கிடைத்தால் அதனை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

அரச கடன் தவிர தனியார் துறையினரும் , வங்கிகளும் செலுத்த வேண்டிய கடன்களும் உள்ளன. இவை இலங்கை அரசாங்கத்தால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களை விட அதிகமானதாகும்.

இது இவ்வாறிருக்க சீனாவிடமிருந்து யுவான்களில் நிதியுதவி கிடைக்கவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

அவ்வாறு கிடைத்தாலும் அது டொலர்களில் நாம் மீள செலுத்த வேண்டியுள்ள கடன் தொகைக்கு போதுமான தொகையாகக் காணப்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right