கின்னஸ் சாதனை பாடகரும் புகழ்பெற்ற இந்திய திரைப்பட பின்னணிப் பாடகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரசிகர்களை மகிழ்விக்க இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

ரசிகர்களை மகிழ்விக்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி கங்கை அமரனின் இசைக்குழுவோடு இலங்கை வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், முதல் தடவையாக யாழ்.மண்ணில் ”நண்பேண்டா” இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

இந்நிலையில் இவர்களுடன் மேலும் பல பிரபல்யமான பின்னணிப் பாடகர்களும் குறித்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

1966 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் கால் பதித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அன்று முதல் இன்று வரை 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தமிழ்த் தரையுலகில் நுழைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தமிழில் துல்லியமான உச்சரிப்பாலும் நளினத்தாலும் அவருடைய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்று ஒலித்தது.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாடியுள்ள எஸ்.பி., திரைப்படங்களுக்கு இசையமைத்தும், திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டும், திரைப்படங்களில் நடித்துமுள்ளார்.

இவர் 36 ஆயிரம் பாடல்களைப் பாடியமைக்காக கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ள எஸ்.பி., 6 முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.

நான்கு தலைமுறைகளுக்கு தொடர்ந்து பின்னணிப் பாடலை பாடிவரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், இலங்கைக்கு வருகை தந்து ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

இதற்கு ஐங்கரன் மீடியா சொலுசனஸ் மற்றும் எயரவன்ற் மீடியா ஆகியன அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.