(எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கியில் கடந்த 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற, அரசாங்கத்துக்கு 68 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய முதல் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக, சட்ட மா அதிபரால் மூன்றாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் சிங்கப்பூர் சட்ட மா அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக  இன்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓரிரு வாரங்களுக்குள் அர்ஜூன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் -  திலங்க | Virakesari.lk

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இதனை கொழும்பு முதலாவது நிரந்தர மூவரடங்கிய விஷேட மேல்  நீதிமன்றத்துக்கு  அறிவித்தார்.

முதலாவது நிரந்தர மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றின் நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே முதலாவது பிரதிவாதி குறித்த மேற்படி அறிவித்தல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அத்துடன் இவ்வழக்கின் 10 ஆவது பிரதிவாதியான பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய அஜஹான் கார்திய புஞ்சிஹேவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நோக்கில், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் மலேஷியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மலேஷிய அரச அதிகாரிகளுக்கு அறிவித்தல் அனுப்புவதற்கும் நீதிபதிகள் குழாம் இதன்போது உத்தரவிட்டது.

இந் நிலையில், அர்ஜூன மகேந்திரன் மற்றும் அஜஹான் கார்திய புஞ்சிஹேவா ஆகிய பிரதிவாதிகளை மன்றில் ஆஜர்ப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட  நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் மன்றுக்கு அறிவிப்பதற்காக, இவ்வழக்கு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.