(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் பற்றாக்குறை ஏதும் காணப்படவில்லை. பாவனைக்கு தேவையான அளவு எரிபொருள் உள்ளது. ஆகவே எரிபொருளின்  விலையை அதிகரிப்பதற்கான தேவை கிடையாது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் ஊடாக நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.

 அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நடைமுறை பொருளாதார நிலைமை, சந்தை நிலவரம் தொடர்பிலான மீளாய்வு பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரிசி, தேங்காய்,பால்மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு மற்றும் தானிய வகைகள், பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மற்றும்  பழங்கள், எரிபொருள் ஆகியவற்றின் ஊடாக நுகர்வோருக்கு நிவாரனம் வழங்குவது குறித்து பிரதமர் அவதானம் செலுத்தினார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால்  அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள  சிக்கல் நிலை, அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையினை அதிகரிக்குமாறு எரிபொருள் நிறுவனங்கள் முன்வைக்கும் கோரிக்கை  உள்ளிட்ட விடயங்களை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன எடுத்துரைத்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோளிய பொருளாதாரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய வங்கியின் பொருளாதார பிரிவு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறக்குமதிகளை கட்டுப்படுத்தினால் சந்தையில் நெருக்கடி நிலை ஏற்படும் என மத்திய வங்கியின் அதிகாரி தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள மெற்றிக் தொன் 3,000 ஆயிரத்துக்கும் அதிகமான அரிசியை சதொச ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.