(எம்.மனோசித்ரா)

தனமல்வில மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கஞ்சா செடி வளர்த்தமை மற்றும் கஞ்சா வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

விசேட அதிரடிப்படையினரால் தனமல்வில பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருந்தமை இனங்காணப்பட்டுள்ளதோடு, சுமார் 10 அடி உயரத்திற்கு வளர்க்கப்பட்டிருந்த 7000 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதன்போது சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். குற்ற விசாரணைப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 1 கிலோ 710 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. 

இவற்றில் எந்த போதைப்பொருளாயினும் அவற்றை வைத்திருப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவர். 

இது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்களை முன்னெடுப்பர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபதி அஜித்ரோஹன தெரிவித்தார்.