(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அத்திணைக்களத்தின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரின் மீளாய்வு மனு குறித்து ஆட்சேபனைகள் இருப்பின் அதனை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று சட்ட மா அதிபருக்கு  அறிவித்தது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அத்திணைக்களத்தின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய மறுத்த, கம்பஹா மேல் நீதிமன்றின் தீர்மானத்தை வலு இழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனுவை  இன்று 17 ஆம்  திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த  மனு  இன்று பரிசீலனைக்கு வந்தது.

 இதன்போது ஷானி அபேசேகர சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா, திலானி ஆரியரத்ன ஆகியோரும் மெண்டிஸ் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, ஹபீல் பாரிஸும் ஆஜராகினர்.

இதன்போது மன்றில் வாதங்களை முன்வைத்த  சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா, ஷானி அபேசேகர சுகயீனம்  அடைந்த நிலையில்  இருப்பதால், அவரது பிணை கோரும் மீளாய்வு மனு தொடர்பில் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். அத்துடன் அவர் 7 மாதங்களாக விளக்கமரியலில் உள்ள நிலையில், விளக்கமரியல் காலம் ஒருவருக்கு தண்டனையாக வழங்கப்படல் கூடாது என அவர் வாதிட்டார்.

 இந் நிலையிலேயே இம்மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் மன்றில் சமர்ப்பிக்க சட்ட மா அதிபருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள,  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட  8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்ய புதிதாக சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி, இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

குறித்த இருவரும் கம்பஹா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த பிணை மனு கடந்த 2020  டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி  நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே, மேல் நீதிமன்றின் உத்தரவை மீளாய்வு செய்து தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஷானி அபேசேகர, சுகத் மெண்டிஸ் சார்பில் மேன் முறையீட்டு மன்றில் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.