(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம் ஜனநாயக விராேதமான தீர்மானங்களுக்கு செல்வதற்கு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தமே காரணமாகும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதென்றும் இயற்கை வனாந்திரங்களை பாதுகாப்பதென்றும் தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாகவே செயற்பட்டு வருகின்றது. மக்களுக்கு சுதந்திரமாக அவர்களது கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலையே இருந்து வருகின்றது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

மேலும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்ட பின்னரே அரசாங்கம் தான் நினைக்கும் எதனை வேண்டுமானாலும் செய்வோம் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றது. 20ஆவது திருத்தத்தை அரசாங்கம் அனுமதித்துக்கொண்டமைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் பொறுப்புக்கூறவேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனே 20 நிறைவேற்றப்பட்டது. அவர்களது ஆதரவு இல்லாவிட்டால் 20 நிறைவேறி இருக்காது.

அத்துடன் 20ஆவது திருத்தத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் ஆதரவளிக்க முற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த சஜித் பிரேமதாச முறையான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அதேபோன்று அரசாங்கம் மேற்கொள்ளும் ஜனநாயக விராேத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவோ அதற்கு எதிராக செயற்படுவதற்கோ எதிர்க்கட்சிக்கு முடியாமல் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அவர்களும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெறுமனே பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்.

மேலும் நாட்டின் தேசிய வனங்களில் பாரியளவில் காடழிப்பு இடம்பெற்று வருகின்றது. காடழிப்புக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அரசாங்க அதிகாரிகளினால் அச்சுறுத்தப்படுகின்றனர். சிங்கராஜ வனத்தில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்த பாக்கியா அபேரத்ன என்ற இளம் யுவதி பாரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றார். அந்த யுவதியின் அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் யுவதியை விசாரித்து வருகின்றது.

எனவே அரசாங்கம் இவ்வாறு ஜனநாயக விராேதமான நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொள்வதற்கு 20ஆவது திருத்தமே காரணமாகும். ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு சென்றவர்களின் ஆதரவுடனே அரசாங்கம் அதனை நிறைவேற்றிக்கொண்டது. அதனால் அரசாங்கத்தின் ஜனநாயக விராேத செயல்களுக்கு சஜித் பிரேமதாசவும் பொறுப்பு கூறவேண்டும் என்றார்.