(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக காணப்படுகிறது. அரிசியின் நிர்ணய விலை பேணப்படாவிட்டால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவார்கள். ஆகவே புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை பகுதியளவில் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர்வழங்கல் அமைச்சில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அரசாங்கம் பொருளாதாரத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளது. சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டதன் காரணமாக சந்தையில் சிறுஏற்றுமதி பயிர்களுக்கான கேள்வி அதிகளவில் காணப்பட்டாலும் உள்ளுர் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்துள்ளார்கள்.  

கடந்த ஒக்டோபர் மாதமளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில்  குறைக்கப்பட்டன.  இதன்போது சீனிக்கான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டது. இதனையே எதிர்தரப்பினர் தற்போது சீனி மோசடி என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பினால்  எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை. சீனி விலைக்குறைப்பின் பயனை  நுகர்வோர் பெற்றுக் கொள்வதில்  சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.இவ்விடயத்தை கொண்டு தற்போது எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசாங்கத்திற்கு காணப்படும் பிரதான சவாலாக உள்ளது.புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை பகுதியளவேனும் குறைக்கப்படாவிட்டால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவார்கள். இவ்விடயம் குறித்து வர்த்தகத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அரிசியின் நிர்ணயத்தன்மையை நிலையாக பேணுவதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது.அரிசியின் மொத்த உற்பத்தியை அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். அரசியின் உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்ட விளைச்சல்  இம்முறை கிடைக்கப் பெறவில்லை என்றார்.