(எம்.ஆர்.எம்.வசீம்)

2025 இல் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவோம். அதற்கான முதலாவது காலாண்டில் அதன் இலக்கை அடைந்துள்ளோம் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் எந்த பிரதேசத்திலாவது நீர் கசிவு இடம்பெறுவதை கண்டால் 1939 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்கவும் எனவும் அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர்வழங்கல் அமைச்சு மேற்கொண்டுள்ள பாரிய நீர் வழங்கல் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று நீர்வழங்கல் அமைச்சில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மார்ச் 22 ஆம் திகதி உலக நீர் தினத்தை முன்னிட்டு நீ்ர் வழங்கல் அமைச்சு பாரிய நீர் வழங்கல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருப்பதுடன் நீர் வழங்கல் வேலைத்திட்டங்களை மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அதன் பிரகாரம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்துக்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டத்தினால் 65ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கப்பெறுகின்றது.

அத்துடன் எமது அரசாங்கத்தின் இலக்காக இருப்பது எதிர்வரும் 2025ஆம் ஆண்டாகும்போது நாட்டில் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதாகும். அந்த இலக்கை அடைவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 2021மார்ச் முதலாவது காலாண்டில் அதன் இலக்கை நாங்கள் அடைந்திருக்கின்றோம்.

இதன் பிரகாரம் நாங்கள் எமது வேலைத்திட்டங்களை கொண்டுசெல்ல முடியுமானால் 2025இல் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அத்துடன் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை.

என்றாலும் நீர் விரயமாகாமல் பாதுகாத்துக்கொள்வது அனைவரதும் பொறுப்பாகும். அதனால் நாட்டில் எந்த பிரதேசத்திலாவது நீர் கசிவுகள் இடம்பெறுவதை கண்டால் 1939என்ற எமது துரித இலக்கத்துக்கு அறிவிக்கவும். 1939என்ற துரித இலக்க செயற்பாடுகள் முறையாக தற்போது செயற்படுவதில்லை. 

என்றாலும் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அதன் செயற்பாடுகளை முறையாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். அதன் பின்னர் துரித இலக்கத்துக்கு வரும் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றார்.