(எம்.மனோசித்ரா)

நல்லாட்சி அரசாங்கத்தில் கட்டடப்பட்ட தொடர்மாடி குடியிருப்புக்களில் எஞ்சியுள்ளவற்றை அண்மையில் கொழும்பில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். இது தொடர்பான கருத்தை கூறிய போது பௌத்த தேரரொருவர் என்னிடம் முரண்பட்டார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அஞ்சுபவர்கள் நாம் அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

சீனி இறக்குமதி வரி குறைப்பின் மூலம் இடம்பெற்ற மோசடியை மறைப்பதற்காக சிங்கராஜவனம் தொடர்பில் கருத்து தெரிவித்த யுவதி ஜனாதிபதியால் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவர் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் புர்கா தடை விவகாரம் பரப்பிவிடப்பட்டுள்ளது. 

மறுபுறம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதே வேளை உள்நாட்டிலுள்ளவர்கள் சர்வதே நீதியை கோரினால் அவர்கள் நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் முதன் முதலில் இலங்கையை காட்டிக்கொடுத்தவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவேயாவார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் கட்டப்பட்ட பல மாடி வீடுகள் இன்னும் மக்களுக்கு கொடுக்கப்படாமலுள்ளன. அவற்றில் 32 வீடுகளை அண்மையில் கொழும்பில் தீவிபத்திற்குள்ளான மக்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இந்த கருத்தை விளங்கிக்கொள்ளாத பௌத்த தேரரொருவர் என்னுடன் முரண்பட்டார். எனினும் நாம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அஞ்சுவதில்லை என்றார்.