கிளிநொச்சியில் பொலிஸாரின் பாவனையிலுள்ள காணியை அரச காணியாக அளவீடு செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது  

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிசாரின் பாவணையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி நிறுத்தப்பட்டது. கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் திணைக்கள பிரிவுகள் பயன்படுத்திவரும் காணியை அரச காணி என தெரிவித்து இன்று அளவீடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டது.

இன்று காலை 8.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வருகை தந்த நில அளவையாளர்கள் அளவீட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்திருந்த காணி உரிமையாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தியவர்கள் மற்றும், அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு மத்தியில் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது

குறித்த காணி தனியார் காணி எனவும், அதன் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் உள்ளதாகவும், அவர்கள் வருகை தரும்வரை காணியை அளவீடு செய்யும் நடவடிக்கையினை நிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் எழுத்து மூலமான கடிதமும் வருகை தந்திருந்த நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.


குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவையாளரும் வருகை தந்து காணி ஆவணங்கள் தொடர்பில் விபரங்களை கேட்டறிந்தார். குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பிர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் வருகை தந்து அளவீட்டை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து குறித்த அளவீடு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதேவேளை குறித்த காணி  தொடர்பில் உரிமையாளர்கள் இருப்பின் பிரதேச செயலகத்துடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்கனவே கரைச்சி பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.