(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் இந்தியா , அமெரிக்கா அல்லது வேறு நாடுகளால் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இவ்வாறான காரணிகளுக்காக தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அவசரப்படவில்லை.

அரசியலமைப்பிற்கமைய மாகாணசபைத் தேர்தல் என்பது நாட்டின் மூலச்சட்டம் என்பதால் அதற்கு முக்கியத்துவமளிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாணசபைகள் தொடர்பில் கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அவசரப்படவில்லை. கடந்த அரசாங்கத்தால் மாகாணசபைத் தேர்தல் கால வரையறை இன்றி காலம் தாழ்த்தப்பட்டது. இது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் 05.00 மணிக்கு நடத்தப்படவிருந்த வாக்கெடுப்பை இரவு 09.00 மணி வரை நீடிக்கப்பட்டது. இதன்போது எதிராக வாக்களிக்க தயாராக இருந்த ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் என்பவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக காலம் நீடிக்கப்பட்டது. பின்னர் ஜே.வி.பி.யின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டது.

எனினும் மாகாணசபைத் தேர்தல் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி இது நாட்டின் மூலச்சட்டமாகும். காலம் தாழ்த்தப்பட்டுள்ளமைக்கான காரணம் மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகள் என்பவற்றை சீர்செய்தல் எமது பொறுப்பாகும். எனவே தேர்தலை நடத்துவதில் எமது இணக்கப்பாடு இங்கு முக்கியத்துவமுடையதல்ல. மாகாணசபைத் தேர்தல் எமது நாட்டின் மூலச்சட்டம் என்பதால் அதற்கு நாம் முக்கியத்துவமளிக்க வேண்டும்.

இவ்விடயத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அல்லது வேறு நாடுகள் பிரச்சினையல்ல. தேர்தலுக்கு அஞ்சி இதனை காலம் தாழ்த்துவதற்காக கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளே தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பிரதான காரணியாகும். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உள்ளூராட்சி தேர்தலும் ஒரு வருடத்திற்கு காலம் தாழ்த்தப்பட்டது. அதே போன்று தான் மாகாணசபைத் தேர்தலும் கால வரையறையின்றி காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.

எனவே இதற்கு தேவையான சட்ட மூலத்தினை சமர்ப்பித்து , பாராளுமன்றத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே இவ்விடயத்தில் யாருடைய அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் ஒரு தொகுதியான மூலச்சட்டத்திற்கு நாம் மதிப்பளித்து செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கடந்த காலங்களில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து , மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் தற்போதைய அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.