(எம்.மனோசித்ரா)
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. தடுப்பூசி  பெற்றுக் கொண்டவர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தில் வெகு விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. வெளிநாடுகளில் இரு கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு 14 நாட்களின் பின்னர் நாடு திரும்புபவர்கள் இருப்பார்களாயின் அவர்களை பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன் போது பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி ,

கடந்த டிசம்பர் கொண்டாடப்பட்ட நத்தார் பண்டிகை மற்றும் அதன் பின்னரான பண்டிகைகளின் பின்னர் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். எனவே கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் விதிகளை முறையாக பின்பற்றி பண்டிகைகளை வழமை போன்றல்லாமல் கொண்டாட வேண்டும்.

அவ்வாறன்றி கொவிட் தொற்றுக்கு முன்னர் கொண்டாடியதைப் போன்று சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் பண்டிகைகளை கொண்டாட முயற்சித்தால் ஏதேனுமொரு முடிவை எடுக்க வேண்டியேற்படும். இது தொடர்பில் நிலைப்பாடுகள் காணப்பட்டால் அறியத்தருமாறு கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.