(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்துவது மக்களாணைக்கு முரணானதாகும். தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். மாகாண சபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

எம்பிலிபிட்டிய பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களின் வாக்குரிமையினை மதிப்பிட முடியாது. எவருக்கு ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்க வேண்டும் என்பதை நாட்டு மக்களே இறுதியில் தீர்மானிப்பார்கள்.

கடந்த அரசாங்கம் மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த எவ்வித நடவக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. மாறாக தேர்தலை தொடர்ந்து பிற்போடும் வழிமுறையை தேர்தல் முறைமை ஊடாக  பிரயோகித்தது. மாகாண சபை தேர்தலை எத்தேர்தல் முறையில் நடத்துவது என்ற முரண்பாட்டின் காரணமாக மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை இம்முறை மாத்திரம் பழைய தேர்தல் முறைமையின்பிரகாரம் நடத்த முடியும் எனவும் எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் மாகாண சபை தேர்தலை விரைவாக  நடத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்த முடியாது. முரண்பாடான தன்மையில் தேர்தலை நடத்தினால் பெறுபேறுகளும்  முரண்பட்டதாகவே கிடைக்கப் பெறும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்களில் ஒரு சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறான செயற்பாடு மக்களாணைக்கு முரணானதாகும். ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து  அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம் என நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளோம். ஆகவே வாக்குறுதிகளைமறந்து செயற்பட முடியாது. மாகாண சபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.வெகுவிரைவில் மாகாண சபை தேர்தல் சிறந்த முறையில் நடத்தப்படும்.யாருக்கு  ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.