(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. இதன் 51 வீத பங்கு அபிவிருத்திக்கு இந்தியாவின் அதானி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் , மேற்கு முனையத்தின் 51 வீத பங்கினை தன்னகப்படுத்திக் கொண்டதாக அதானி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேற்கு முனையத்தின் 51 வீத பங்கு அபிவிருத்தி அதானி நிறுவனத்தின் கோரிக்கையாகவுள்ளது. எனினும் இவ்விவகாரம் இன்றும் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்களும் இதில் பங்குதாரர்களாக ஆர்வம் காட்டியுள்ளனர்.

எனவே தேசிய முதலீட்டாளர்கள் தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 51 வீதம் அதானி நிறுவனத்தின் கோரிக்கையாகக் காணப்படுகின்ற நிலையில் , எஞ்சிய 49 வீதத்தினை இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தேசிய பங்குதாரர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றும் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.