(செ.தேன்மொழி)

நாட்டை பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடமிருந்தே நாட்டை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து  எவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையில் உத்தேச கடனை அரசாங்கம் பெற்றுக்கொள்ள உள்ளது என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கத்தில் பேச்சு சுதந்திரத்திற்கு ஏற்படுத்தப்படும் தடைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றில் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்ட மாணவியொருவர் சுற்றுபுறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்ததை அடுத்து , பொலிஸார் அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று வாக்கு மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஒரு மாணவியொருவர் அவரது கருத்தை தெரிவிப்பதற்கான உரிமையும் தற்போது பறிக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தல்காலங்களின் போது சுற்றுபுறச் சூழல் தொடர்பில் அக்கறைக் கொண்ட தலைவரொருவராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மணல் , மண் மற்றும் கற்களை ஏற்றிச் செல்வதற்கு அனுமதிபத்திரம் தேவையில்லை என்ற அறிவித்தார். பொதுத் தேர்தல் வரையிலும் அந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இதனால் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை சுற்றாடல் அமைச்சரே ஏற்றுக் கொண்டுள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் வெள்ளை வேன் கலாசாரம் ஒன்று இருந்ததை அனைவரும் அறிவார்கள். தற்போது கறுப்பு வேன் கலாசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊடகவியலாளர் சுஜீவகமகே கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நியாயம் கிடைக்கப்பெறவேண்டும்.

அரசாங்கம் சீன அரசாங்கத்திடமிருந்து 10 பில்லியன் யுவான்களை கடனாக பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்து வருகின்றது. இவ்வாறு அதிக வட்டி வீதத்தில் கடன் பெற்றுக் கொள்வதில் உள்ள நோக்கம் என்ன ?  இதற்காக நாட்டின் எந்த வளத்தை சீனாவுக்கு வழங்கப் போகின்றார்கள். என்பதை அரசாங்கம் தெளிவாக நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். நாட்டை பாதுகாப்பதற்காக ஆட்சிக்கு வருவதாக தெரிவித்து வந்த , அரசாங்கத்திடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சீனி இறக்குமதி வரி குறைப்பின் காரணமாக 15.9 பில்லியன் ரூபாய் பணத்தை அரசாங்கம் இழந்துள்ளது. ஆரம்பத்தில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி காரணமாக எம்மீது பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். ஆனால் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக எமது ஆட்சியின் போதே விசாரணை ஆணைக்குழுவை நியமித்திருந்தோம். இந்த சீனி மோசடி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?.

வெளிநாட்டில் தொழில் புரிந்து வருபவர்கள் நாட்டிற்கு வருவதற்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தங்களது வீட்டிலே தனிமைப்படுத்தப்படலாம் என்று சுற்று நிரூபமொன்றை வெளியிட்டிருந்தார். எனினும் அது செயற்படுத்தப்படவில்லை. ஒரு சில அரசாங்கங்கள் அரச செலவில் நாட்டு மக்களை அழைத்து வருகின்றன. எமது நாட்டை பொறுத்தமட்டில் அந்த நிலைமை இல்லை. அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்தே வருகின்றது. இந்நிலையில் நாட்டு மக்களை தோல்வியடையச் செய்யவேண்டாம் என்று அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.