பெருந்தோட்டத்  தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் கம்பனிகள் தற்போது முன்னெடுத்துள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் பதிளிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.

அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான தீர்மானத்தை நிறைவேற்ற இடமளிக்காமல் கம்பனிகள் விடாப்பிடியாக செயற்படுமானால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தாம் பின்வாங்கப்போவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய  ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண ஆகியோர் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண ,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தொழில் அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

சுமுகமான தீர்வைக் காண்பதற்காக பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் கம்பனிகள் சார்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்ளை ரீதியான தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதற்கு , கம்பனிகள் ஒத்துழைக்கவில்லை.

 எனவே தான் கூட்டு ஒப்பந்தத்திற்கு பதிலாக சம்பள நிர்ணய சபையை நாட வேண்டியேற்பட்டது. தற்போது சம்பள நிர்ணயசபையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

இவ்வாறான சட்ட நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு தொழில் அமைச்சு தயாராகவுள்ளது. அதற்கு அப்பால் இந்த தீர்மானத்தை தோல்வியடைச் செய்வதற்கு கம்பனிகள் முயற்சித்தால் அவை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என்று கூறினார்.