(செ.தேன்மொழி)

வெளிநாட்டு பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது இடம்பெறும் மோசடிகளை உடன் நிறுத்துமாறு குறிப்பிட்டு , அரசாங்கத்திற்கு அழுத்தம் செய்யும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் , அதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள தருணத்தில் , அவர்கள் தொடர்பில் அக்கறைக் கொள்ளாமல் எம்மாள் இருக்கமுடியாது.  இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரிந்து வரும் பணிப்பெண்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வரும் எம்நாட்டு பெண்களை , தங்களது தாய்நாட்டுக்கு செல்வதென்றால் செல்லுமாறும் அதன்போது வீசா அனுமதி பத்திரம் தொடர்பிலோ வேறு விடயங்கள் தொடர்பிலோ தமது அரசாங்கம் எந்தவித தலையீட்டையும் செய்யாது என்று அந்த நாடுகள் அறிவித்துள்ளன. இவ்வாறு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள போதிலும் , அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவில்லை.

இந்நிலையில் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போலியான சாடல்களை எதிர்க்கட்சி மீது முன்வைக்கினறார். கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிப்படைந்துள்ள பணியாளர்களை அழைத்து வருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இவ்வாறு நாட்டுக்கு வந்தாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பெருமளவான பணத்தை செலவிட நேரிடுகின்றது. இதனை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டம் செய்வதற்காக வேறுப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் , உரிய சாகாதார விதிமுறைகளுக்கமைய பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த ஆர்பார்ட்டத்தில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.