உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை திருப்தியடையக் கூடியதாக இல்லை. இதனை முழுமையற்றதாகவே நாம் கருதுகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை நியாயப்படுத்தி அதன் மூலம் இலாபத்தைப் பெற்றுக்கொள்ள எவருக்கும் இடமளிக்க முடியாது என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

எனது மக்களின் உடற்பாகங்கள் துண்டுகளாக சிதறிக் கிடந்தமையை என் இரு  கண்களால் கண்டேன்.

அரசியல்வாதிகள் அதனைப் பார்த்தார்களா என்பது எனக்குத் தெரியாது. இவ்வாறான செயற்பாட்டை நியாயப்படுத்தி , அதன் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளவோ அல்லது அதன் மூலம் இலாபத்தை பெற்றுக் கொள்ளவோ எவருக்கும்  இடமளிக்க முடியாது.

அது எமது மதசார்பான மனச்சாட்சிக்கு விரோதமானதாகும் என்றும் பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

எமது நாட்டில் பெரும்பாலான மக்கள்  இந்த அறிக்கையை  ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாம் அறிவோம்.

எனவே இவ்வாறான சதிகளுக்கு அகப்பட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறிய பேராயர்,

இந்த மக்களுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை ஏனையோருக்கும் ஏற்படலாம்.

இலங்கையில் நீதி , நியாயம் , சகோதரத்துவம் என்பவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் , அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால்

பிற்போக்கான அரசியல் செயற்பாடுகளிலிருந்து வெளிவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார் .

தொடர்ந்து  பேராயர் கூறுகையில்,

நீதியைப்  பாதுகாத்து, அதனை மதித்து , தவறிழைத்தால் தண்டனை வழங்கக் கூடிய பலத்தைக் கொண்ட முதுகெலும்புடைய அரசியல் கட்சியும் அரசியல் தலைவருமே எமக்கு தேவை. மாறாக அரசியல் நோக்குடன் செயற்படுபவர்கள் எமக்கு தேவையானவர்கள் அல்ல என்றார்

இலங்கையில் குற்றவியல் விசாரணைப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு, அரச புலனாய்வுப் பிரிவு, இராணுவத்திற்குரிய புலனாய்வுப் பிரிவு என பல பிரிவுகள் உள்ளன.

இவை அனைத்தும் ஒவ்வொரு போக்கில் செயற்படாமல் ஒன்றிணைந்து இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும்  பேராயர்  கேட்டுக்கொண்டார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் அதே வேளை,

தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் போது தான் நாம் எமது போராட்டத்தை கைவிடுவோம் என்றும் பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.