(எம்.ஆர்.எம்.வசீம்)

சீனிக்கான வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நஷ்டம் தொடர்பாக கணக்காய்வாளர் திணைக்களம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சூலாந்த விக்ரமரத்ன தெரிவித்தார்.

5,000 ரூபா வழங்கலில் முறைகேடுகள்; கணக்காய்வு திணைக்களத்தால் விசாரணை -  Newsfirst

சீனி இறக்குமதிக்காக இருந்த 50ரூபா வரியை 25சதம் வரை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் காரணமாக அரசாங்கத்துக்கு 15.9 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கணக்காய்வாளர் திணைக்களம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சீனி இறக்குமதிக்கான வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஒன்றை கணக்காய்வாளர் திணைக்களம் ஆரம்பித்திருக்கின்றது.

அதுதொடர்பான தகவல்களை தற்போது பெற்று வருகின்றோம். இதுதொடர்பான அறிக்கையை மிகவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

அத்துடன் சதோச நிறுவனம் கூடுதலான தொகைக்கு சீனியை கொள்வனவு செய்து, அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது.

அதுதொடர்பான விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. நஷ்டம் என தெரிந்துகொண்டே சதொச நிறுவனம் இவ்வாறான தீர்மானம் ஒன்றுக்கு செல்வதற்கு முற்பட்டது, எந்த நோக்கத்தின் அடிப்படையில் என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும்.

மேலும் சீனி வரி குறைப்பினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பாக எமது திணைக்களம் விசாரணை ஒன்றை மேற்கொள்வதுடன் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவும் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

சீனி இறக்குமதியில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமையவே இந்த விசாரணையை ஆரம்பித்திருக்கின்றது என்றார்.