யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு , கிழக்கு மக்கள் உணர்வுபூர்மாக கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ்.மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு ! |  Virakesari.lk

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழில் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

பல்கலைக்கழக மாணவர்களினால் பல்வேறு தரப்பினரிடம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும், தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களான தேசியம் , தாயகம் , சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் வகையில் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாளைய தினம் புதன்கிழமை (17) கிட்டுப்பூங்காவில் இருந்து நல்லூரில் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வரும் திடல் வரையில் ஓர் பேரணியை பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். 

அந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பெருமளவான மக்கள் வரவுள்ளனர். 

எனவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கிறேன் , இந்த போராட்டத்திற்கு உணர்வு பூர்மாக கலந்து கொண்டு இந்த போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்தார்.