ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா, கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ்ஸை பெற்றுள்ளார். இதன் மூலம் ஜப்பானில் பகிரங்கமாக தடுப்பூசி பெற்ற முதல் அரசாங்க அதிகாரியாகவும் ஆனார்.

அடுத்த மாதம் ஜப்பான் பிரதமரின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக ஜப்பானின் 80 முதல் 90 அதிகாரிகள் வரை தடுப்பூசி பெற்றுக் கொள்வார்கள்.

அமெரிக்க செல்லும் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பினை மேற்கொள்வார். இதனால் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரைச் சந்தித்த முதல் உலகத் தலைவர் என்ற பெயரையும் யோஷிஹைட் சுகா பெறுவார்.

ஜப்பான் தனது கொவிட்-19 தடுப்பூசி பிரசாரத்தை கடந்த மாதம் ஃபைசர் இன்க் / பயோஎன்டெக் தடுப்பூசியின் இறக்குமதி அளவுகளுடன் தொடங்கியது.

ஜப்பானின் தடுப்பூசி முயற்சிக்கு பொறுப்பான அமைச்சர் டாரோ கோனோ, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் தற்சமயம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

திங்களன்று 290,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை வழங்கியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.