(செ.தேன்மொழி)

அக்கறைப்பற்று - ஒழுவில் பகுதியில் ஆறு இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒழுவில் பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  ஆறு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்களிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , 124 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களும் , முழுமையாக அச்சிடப்படாத 20 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இந்த போலி நாணயத்தாள்களை கடத்த பயன்படுத்திய கார் , அச்சி இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேக நபர்கள் தொடர்பில் அம்பாறை பொலிஸ் அத்தியட்சகரின் விசேட கண்காணிப்பின் கீழ் , அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, பண்டிகைகாலம் ஆரம்பமாக இருப்பதால் , இதுபோன்ற மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் மக்கள் இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

இந்நிலையில் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளின் போது கிடைக்கப்பெறும் நாணயத்தாள்கள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே  அருகிலிருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கு அது தொடர்பில் அறிவிக்க வேண்டும்.