மேற்கிந்தியத்தீவுகளுடனான மூன்றாவது போட்டியின் போது, பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அதிகளவான நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தினால் இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.

அதன்படி இலங்கைக்கு அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் அபராதத்தை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் விதித்துள்ளது.

ஆன்டிகுவாவில் ஞாயிற்றுக்கிழமை இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 274 ஓட்டங்களை குவித்தது.

275 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 48.3 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 276 ஓட்டங்களை சேர்த்து வெற்றியிலக்கை கடந்தது.

இப் போட்டியில் இலங்கை அணி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அதிகளவான நேரத்தை எடுத்துக் கொண்டதாக கள நடுவர்கள் முறைப்பாடு அளித்தனர். அந்த முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமது குற்றத்தை இலங்கை ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஒப்புக்கொண்டமையினாலும், அபராதத் தொகையை ஏற்றுக் கொண்டமையினாலும் மேலதிகமான எந்த விசாரணையும் நடைபெற மாட்டாது.

இதற்கிடையில் அதே போட்டியின் போது ஐ.சி.சி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலக்கவும் கண்டிக்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸின் 35 ஆவது ஓவரில், குணதிலகா நிக்கோலஷ் பூரனை ஆட்டமிழக்கச் செய்தபோது அவரிடம் பொருத்தமற்ற வசனத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.