2011 மார்ச் 11 இல் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான போராட்டங்கள் வெடித்ததில் இருந்து சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு தசாப்த கால மோதல் மற்றும் நாடு பிளவடைந்துள்ள நிலையிலும்,  அல்-அசாத் உறுதியாக ஆட்சியில் இருக்கிறார்.

உள் நாட்டு போர் தசாப்தம் சிரியா மீது அளவிட முடியாத அழிவை ஏற்படுத்தியுள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர், மேலும் பெரும்பாலானோர் தங்கள் அடுத்த வேளை உணவைப் பாதுகாக்க பெரும் போராட்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

போருக்கு பின்னரான காலகட்டத்தில் சிரியாவிலிருந்து  மில்லியன் மக்கள் பெரும்பாலும் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர், இதில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகளாக உள்ளனர்.

போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்றும் அரசியல் சுதந்திரமின்மை ஆகியவை ஜனாதிபதி அல்-அசாத்தின் ஆட்சியில் உள்ளது குறித்து குற்றச்சாட்டுகளை வைத்தனர். 

2011 மார்ச் 15 அன்று சிரியாவின் தெற்கு மாகாணமான டெராவில் ஒரு போராட்ட எழுச்சியுடன் போர் தொடங்கியது, 

டெர்ரா நகரின் தெற்குப்பகுதியில் அரபு வசந்தத்தால் ஈர்க்கப்பட்ட, ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒரு கண்டன போராட்டம் நடைபெற்றது. 

இத்தகைய போராட்டங்களை செய்வோரை நசுக்க, அரசு தனது படைகளை பயன்படுத்த, ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கின.

அமைதியின்மை தொடரத் தொடர, போராட்டங்கள் வெடித்தன. முதலில் தற்காப்பிற்காகவும், பிறகு தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளை விரட்டி அடிக்கவும், எதிரணியை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஏந்தினர். `அந்நிய சக்தியின் உதவிகளை பெற்றுள்ள பயங்கரவாதிகளை` முழுமையாக நசுக்கி நாட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வருவேன் என்று ஜனாதிபதி உறுதிமொழி அளித்தார்.

இந்த வன்முறைகள் மிக விரைவிலேயே அடுத்த நிலைக்கு சென்று உள்நாட்டு போராக மாறியது. அரசின் படைகளை எதிர்கொள்வதற்காக, நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் அணிவகுத்தனர்.

ஆட்சியின் சக்தியைப் பயன்படுத்துவது அமைதியான பொது ஆர்ப்பாட்டங்களை உள்நாட்டுப் போராக மாற்றியது. சுதந்திர சிரிய இராணுவப் பதாகையின் கீழ் கூடிய அசாத் ஆட்சியின் படைகளுக்கும் இராணுவ எதிர்க்கட்சி குழுக்களுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் 2012 இல் தொடங்கப்பட்டன.

சுருக்கமாக சொல்லப்போனால், ஜனாதிபதியின் ஆதரவுப் படைகளுக்கும், எதிரானவர்களுக்கு இடையிலான போர் என்ற வடிவத்தை இந்த போர் தாண்டியிருந்தது.

அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற உலக சக்திகளின் தலையீடு இதில் முக்கிய விடயங்களாக அமைந்தன. ஜனாதிபதியின் ஆதரவு மற்றும் எதிர் படைகளுக்கு, இந்நாடுகள் அளித்த இராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகள் இப்போர் தீவிரமடையவும், தொடரவும் வழிவகுத்தன.

இது பிற்காலத்தில், சிரியாவை ஒரு போர்க்களமாக மாற்றியது.

நாட்டில் பெரும்பான்மையில் உள்ள சுன்னி பிரிவு இஸ்லாமியர்களை ஜனாதிபதியின் ஷியா அலாவித் பிரிவுக்கு எதிராக தூண்டிவிட்டு, பிரிவினைவாதத்தை உருவாக்குவதாக வெளிநாட்டு சக்திகள்மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இந்த பிரிவு இருதரப்பிலிருந்தும் அத்துமீறல்கள் நடக்க ஊக்கமளித்தது. இதனால் உயிர்ச்சேதம் மட்டுமில்லாமல், அமைப்புகள் பிளவுபட்டன, சூழல் மிகவும் கடினமானது, அரசியல் தீர்வுகாண்பதற்கான நம்பிக்கை என்பது குறைந்தது.

இந்த பிரிவுகளில் ஜிகாதிக்குழுக்களும் இணைந்து கொண்டன. அவை மேலும், இந்தப் போரில் பல பகுதிகளை உருவாக்கின. அந்நாட்டின் வட-மேற்கு பகுதியின் பல பகுதிகளை ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற குழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தஹ்ரிர் அல்-ஷாம் என்பது, அல்-கய்தா மற்றும் அல்-நுஸ்ராவின் கூட்டணியில் உருவான குழுவாகும்.

இதற்கிடையில் சிரியாவின் வட-கிழக்கு பகுதிகளின் பல பகுதிகளை இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் குழு கைபற்றியது.

ஆனால் தற்போது, ரஷ்யாவின் ஆதரவு கொண்ட அரச படையினர், குர்துக்களின் ஆதரவுகொண்ட கிளர்ச்சியாளர்கள் மற்றும் அமெரிக்காவின் ஆதரவைக்கொண்ட குர்திய ராணுவ ஒப்பந்தக்குழு ஆகியோரின் தாக்குதலால், நகர்புறத்தில் தனக்கு இருந்த வலிமையான இடங்களை கைவிட்டுச் சென்ற ஐ.எஸ் குழு, ஒரு சில சிறிய இடங்களை மட்டும் தன் கைக்குள் வைத்துள்ளது.

ஷியா பிரிவினரின் புனித தலங்களை பாதுகாப்பதற்காக, லெபனான், இராக், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த பல ஷியா கிளர்ச்சியாளர்கள் சிரியா அரசு ராணுவத்துடன் இணைந்து சண்டையிட்டு வருகின்றனர்.

உள்நாட்டுப் போரில் நூறாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், மேலும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துதல், பட்டினி, நாடுகடத்தல், முற்றுகைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் சித்திரவதை போன்ற போர்க்குற்றங்களும் அரங்கேறுகின்றன.

2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் 22-23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிரியாவில் உள்நாட்டு போருக்கு பின்னர் 6.6 மில்லியன் மக்கள் அங்கிருந்து அண்டையை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

துருக்கியில் மட்டுமே இடம்பெயர்ந்த 3.7 மில்லியன் சிரியர்கள் தற்சமயம் வாழ்கின்றனர்.