(நா.தனுஜா)

பாராளுமன்றத்தேர்தல் முடிவடைந்து தற்போது ஒருவருடம் பூர்த்தியடையவுள்ளது. எனினும் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர் ஒருவரை அனுப்பிவைக்க முடியாத நிலையில் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். அவ்வாறிருந்துகொண்டு மீண்டும் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவிருப்பதாகக் கூறுகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஹைட்பார்க்கில் மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

தற்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை விடவும் எமது கொள்கைகள் மாறுபட்டவையாகும். நாட்டுமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே எமது கொள்கையாகும். எதிர்காலத்தில் அந்தப் பயணத்தை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

எனினும் பொதுஜன பெரமுன அரசாங்கம் கடந்த காலத்திலும் தற்போதும் தத்தமது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கே முற்படுகின்றார்கள். துறைமுகங்கள், விமானநிலையங்களை நிர்மாணிக்கின்றார்கள். எனினும் அவற்றால் எந்தவொரு வருமானமும் இல்லை. மாறாக அதில் அவர்கள் பெருமளவான நிதியை தமதாக்கிக்கொள்கின்றார்கள்.

பெருமளவான கடன்சுமையில் இருந்து நாட்டையே நாம் கடந்த 2015 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக்கொண்டோம். எனினும் நாட்டை மென்மேலும் கடனாளி ஆக்காமல் சிறப்பானதொரு நிர்வாகத்தை முன்னெடுத்துச்சென்றோம்.

ஆனால் 2019 ஆம் ஆண்டின் ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம் புதிதாக பெருமளவில் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. 

இதன் விளைவாக நாட்டிலுள்ள ஏனைய சொத்துக்களின் மதிப்பு வீழ்ச்சியடையும். இவையனைத்தையும் செய்துகொண்டு தான் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் மீட்டெடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

பாராளுமன்றத்தேர்தல் முடிவடைந்து தற்போது ஒருவருடம் பூர்த்தியடையவுள்ளது. எனினும் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர் ஒருவரை அனுப்பிவைக்க முடியாத நிலையில் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். அவ்வாறிருந்துகொண்டு மீண்டும் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவிருப்பதாகக் கூறுகின்றார். அத்தகைய நிலையேற்படுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்பபோவதில்லை. 2025 ஆம் ஆண்டில் நாம் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றி, நாட்டை வலுப்படுத்துவோம்.

போர் நடைபெற்ற காலத்தில் எமக்கு ஒரேயொரு தண்ணீர் போத்தலைக் கூட அனுப்பிவைக்காத, அநுராதபுரத்தைத் தாண்டி காலடி எடுத்துவைக்காத விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் தற்போது நாடு குறித்துப் பேசுகின்றார்கள். அடுத்ததாக சரத் வீரசேகர என்பவர் தேசப்பற்றாளர் போன்று பேசுகின்றார். அவருக்கு எவரேனும் ஜெனிவாவில் இருந்து விமான டிக்கெட் அனுப்பிவைப்பார்கள். அங்குசென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அலுவலக முகவரிக்கு கடிதமொன்றை அனுப்புவார். மனித உரிமைகள் ஆணையாளரை நேரில் சந்திப்பதற்குக் கூட அவருக்கு வாய்ப்புக்கிடைக்காது. பின்னர் அங்கு உறவினர்கள் வீட்டில் நன்கு உணவருந்திவிட்டு நாடு திரும்புவார். அத்தகையவர்களுக்கு மக்கள் வாக்களித்து, தேர்தலில் வெற்றி பெறச்செய்கின்றார்கள்.