இலங்கை அணியின் 8 ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிகூடிய ஓட்டங்கள‍ை பெற்ற இலங்கை வீரர் என்ற பெருமையை வனிந்து ஹசரங்க பெற்றார்.

ஆன்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்றைய தினம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது வனிந்து ஹசரங்க இந்த பெருமையை பெற்றார்.

அதன்படி தனது இன்னிங்ஸுக்காக ஹசரங்க மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 80 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

முன்னதாக 47 ஓட்டங்களை குவித்த இரண்டு நாட்களின் பின்னர் ஹசரங்க இந்த ஓட்டங்களை பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற இப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்றது. அதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி டேரன் பிராவோவின் சதத்துடன் 48.3 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை கடந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக ராவோவும், தொடரின் ஆட்ட நாயகனாக ஷேய் ஹோப்பும் தெரிவானார்கள்.