சர்வதேச டி-20 கிரிக்கெட் அரங்கில் 3 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி பெற்றார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் 2 ஆவது போட்டியின் போதே விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டினார்.

இந்த இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்கு முன்னர் விராட் கோலிக்கு குறித்த இலக்கை எட்டுவதற்கு 72 ஓட்டம் தேவை என்ற நிலையிருந்தது.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் 50 க்கும் மேற்பட்ட சராசரியைக் தற்சமயம் கொண்டுள்ள விராட் கோலி, டி-20 கிரிக்கெட் அரங்கில் 3 ஆயிரம் ஓட்டங்களை பெறுவதற்கு 81 இன்னிங்ஸ் (87 போட்டிகள்) தேவைப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் மார்ட்டின் குப்டில் தற்போது 99 டி-20 போட்டிகளில் 2,839 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 109 போட்டிகளில் 2,773 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

2008 ஆகஸ்ட் மாதம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதித்த விராட் கோலி, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் ஓட்டங்களை குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங், மஹேல ஜெயவர்தன, ஜாக் காலிஸ் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பின்னால் 7 ஆவது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி 91 டெஸ்ட் போட்டிகளில் 7,490 ஓட்டங்களை எடுத்துள்ளார், மேலும் ஒருநாள் போட்டிகளில் சச்சின், சங்கக்கார, பாண்டிங், ஜெயசூரியா மற்றும் ஜெயவர்தனே ஆகியோருக்கு பின்னால் அதிக ஒட்டங்களை  எடுத்த  வீரர்களின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளார் (12040). 

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களைக் கொண்ட விராட் கோஹ்லி, அந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (100), ரிக்கி பாண்டிங் (71) ஆகியோருக்குப் பின்னால் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நேற்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.