ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான இலங்கைப் பெண்ணொருவர் மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதுரகம் உறுதிசெய்துள்ளது.

அவரது விசா காலாவதியானதால் கடந்த ஆகஸ்ட் முதல் அவர் தடுப்பு மையத்தில் இருந்தார் என்று தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இலங்கையின் கம்பஹாவைச் சேர்ந்த இவர் 2017 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக ஜப்பானுக்கு சென்றிருந்தார். எனினும் விசா காலாவதியானமையினால் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து தொடர்ந்து அவர் தொடர்ந்தும் முறைப்பாடு அளித்ததாகவும், அந்த உணவினால் அவர் பலவீனமடைந்தாகவும் கூறப்படுகிறது.

ஆறு சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதித்ததாகவும், குறைந்தபட்சம் அவர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு அதிகாரி தெரிவித்ததாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எனினும் அவரது உயிரிழப்புக்கான உறுதியான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து நாங்கள் ஏற்கனவே ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தூதரக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து தனித்தனி பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஜப்பானிய நீதி அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.