(எம்.மனோசித்ரா) 

கூட்டு ஒப்பந்தத்திலிருந்து முதலாளிமார் சம்மேளனம் விலகினால் ஒப்பந்தம் இரத்தாகும். ஆனால் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகினாலும் அதில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை தொழிலாளர்களிடமிருந்து மீள பறிக்க முடியாது.

காரணம் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முன்னரே தொழிலாளர்களுக்கான உரிமைகள் , சலுகைகள் பலவும் சட்டமயமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொழிலாளர் சங்கம் மற்றும் இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் ஆகியவற்றின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.

1000 ரூபா நாளாந்த சம்பளம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் , 100 ரூபா பாதீட்டு கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படும் என்ற விடயம் தெளிவுபடுத்தப்படவில்லை.

எனவே தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தொழிலாளர்களுக்கு தெளிவான தீர்மானத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வீரகேசரிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் கூறியதாவது:

கேள்வி : கூட்டு ஒப்பபந்தத்தின் ஊடாக இரு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்.

எனினும் இம்முறை சம்பள நிர்ணயசபையினூடாக இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் அடுத்தடுத்த சம்பள அதிகரிப்புக்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படும்?

பதில் : பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள விவகாரத்திற்கு இம்முறை சம்பள நிர்ணயசபையினூடாக தீர்வு காணப்பட்டுள்ளது.

எனினும் கூட்டு ஒப்பந்தம் இல்லாதபோது காலத்துக்கு காலம் வாழ்க்கை செலவு புள்ளி அடிப்படையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால் சம்பள அதிகரிப்பிற்கு மீண்டும் சம்பள நிர்ணயசபையையே நாட வேண்டும்.

எனினும் இதற்கான காலம் வரையறுக்கப்படவில்லை. மாறாக காலத்துக்கு காலம் அதிக்கப்பட வேண்டும் என்ற விடயமே காணப்படுகிறது.

அதாவது கீழ் மட்டத்திலிருந்து வரும் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு 15 தடவைகள் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் சம்பள திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் மட்டத்திலுள்ள அரச அதிகாரிகளுக்கு 5 தடவைகள் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் தனியார் துறையில் அவ்வாறு சம்பள திட்டமொன்று இல்லை.

எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படும் போது , தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கம்பனிகள் அதனை வழங்க வேண்டும்.

அவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை எனில் சம்பள நிர்ணயசபை நியமிக்கப்பட வேண்டும். இதற்கு கால வரையறை கிடையாது. எனினும் சம்பள நிர்ணயசபை காலத்திற்கு காலம் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இம்முறை சம்பள நிர்ணயசபை நியமிக்கப்படவில்லை. பழைய உறுப்பினர்களின் பங்குபற்றலுடனேயே கூடியது. சம்பள நிர்ணயசபை சட்டத்தின் ஊடாக இதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டும்.

கேள்வி : கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் பட்சத்தில் சம்பள அதிகரிப்பு தவிர்ந்த தொழிலாளர்களின் ஏனைய நலன் சார் விடயங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது ?

பதில் : கூட்டு ஒப்பந்தம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே தோட்டப்பகுதிகளில் தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்கள் காணப்பட்டன. பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கம் என்பவற்றின் நிதியுதவியுடனேயே சிறுவர் பராமறிப்பு நிலையம் , மருந்தகங்கள் உள்ளிட்டவை நிர்வகிக்கப்படுகின்றன. எனவே அவற்றை தொடர்ச்சியாக பேணுவதில் சிக்கல் ஏற்படாது.

கேள்வி : கம்பனிகள் கூறுவதைப் போன்று வேலை நாட்களை குறைக்க முடியுமா?

பதில் : இல்லை. அவ்வாறு வேலை நாட்களை குறைக்க முடியாது. கூட்டு ஒப்பந்த முறைமை நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே வரட்சி காலத்தில் கூட 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது. 1980 களில் ஆகக் குறைந்தது 15 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளன.

எனவே வேலை நாட்கள் என்பது கூட்டு ஒப்பந்தத்திற்குள் வரையறுக்கப்பட்டதல்ல. வருடத்தில் 300 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பது கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டாலும் அதில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்த உரிமைகளை பறிக்க முடியாது. தொழில் பிணக்குகள் தொடர்பான வழக்குகளின் போது இவ்வாறான சட்ட விவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதலாவது கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அது காலாவதியாகும் வரை அதிலுள்ள உரிமைகள் சலுகைகள் நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.

மாறாக கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் பட்சத்தில் கம்பனிகள் கூறுவதைப் போன்று வேலை நாட்கள் விடயத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டால் கைத்தொழில் நீதிமன்றத்தைக் கூட்டுமாறு தொழிற்சங்கங்கள் தொழில் ஆணையாளரிடம் கோர முடியும். அதற்கமைய தொழில் அமைச்சரினால் கைத்தொழில் நீதிமன்றம் அமைக்கப்பட்டு அதனூடாக தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி : பாதீட்டு கொடுப்பனவு 100 ரூபா எவ்வாறு வழங்கப்படும் ?

பதில் : தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைய 900 ரூபாய் அடிப்படை சம்பளம் நாளாந்தம் நிச்சயம் வழங்கப்பட வேண்டும். எனினும் பாதீட்டு கொடுப்பனவு 100 ரூபா எவ்வாறு வழங்கப்படும் என்பதை அரசாங்கமே அறிவிக்க வேண்டும். இந்த கொடுப்பனவு வரவு - செலவு திட்டத்தினூடாக வருடாந்தம் வழங்கப்படுமா அல்லது மாதாந்தம் வழங்கப்படுமா அல்லது அரசாங்கம் கம்பனிகள் ஊடாக வழங்குமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கேள்வி : கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளதே ?

பதில் : கம்பனிகள் கூறுவதைப் போன்று கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது என அது பற்றி புரிதல் அற்ற தொழிற்சங்கவாதிகள் தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்னரே ஒரு தரப்பு முறையான அறிவித்தலை வழங்கி கூட்டு ஒப்பந்தத்தலிருந்து விலக முடியும். ஒரு தரப்பு எனும் போது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் ஒரே தரப்பினராவர். இதே போன்று முதலாளிமார் சம்மேளனம் பிரிதொரு தரப்பினராவர். எனவே கூட்டு ஒப்பந்தத்திலிருந்து ஒரு தரப்பு விலகுவதாயின் தொழிற்சங்கள் மூன்றும் விலக வேண்டும். அல்லது முதலாளிமார் சம்மேளனம் விலக வேண்டும். அவ்வாறு விலகினால் தான் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும். மாறாக 3 தொழிற்சங்கங்களின் ஏதெனுமொன்று விலகினாலும் அல்லது 22 கம்பனிகளில் ஒன்று விலகினாலும் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகாது.

கேள்வி : எவ்வாறிருப்பினும் கம்பனிகள் கூறுவதைப் போன்று வேலை நாள் குறைப்பு உள்ளிட்ட விடயங்களில் விடாப்பிடியாக இருக்கும் பட்சத்தில் அவற்றுக்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது ? சகல விடயங்களுக்கும் சம்பள நிர்ணயசபையை நாட முடியாதல்லவா ?

பதில் : ஆம். எனினும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கூட்டு ஒப்பந்தத்திற்கும் அப்பால் சுமார் 60 இற்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன. கைத்தொழில் பிணக்குகள் சட்டம் , ஊழியர் சேமலாப நிதியம் சட்டம், ஊழியர் நம்பிக்கை நிதியம் சட்டம், மகப்பேற்று சட்டம், தொழிற்சங்க சட்டம், கடை காரியாலய ஊழியர் சட்டம், சம்பள நிர்ணய சட்டம், இந்திய தொழிலாளர் சட்டம், இந்திய தொழிலாளர் குறைந்தபட்ச ஊழியர் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் இலங்கையில் உள்ளன. எனவே கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் பட்சத்தில் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்ப்படப் போவதில்லை.