(ஆர்.ராம்)
பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான பொது விவாதமொன்று எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் கடப்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாகவே, இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

பின்வரிசை  உறுப்பினர்களாக சியொபெய்ன் மக் டோனா , எலியட் கொல்பேண் , சேர் எட்வேர்ட் டேவி ஆகியோர் இந்த பிரேரணையை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா முன்வைத்துள்ள பிரேரணை மேலும் வலுப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று புலம்பெயர் தமிழர் தரப்பும் பிரித்தானிய எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

முன்னதாக ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த ஸ்ரிபன் கினோக் “இலங்கை மீதான வரைவுத்தீர்மானம் தொடர்பில் தனது அதீத அதிருப்தியையும் வரைவுத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விபரங்கள் தெளிவற்றதாகவும் போதுமானதாகவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டி ஆசியப்பிராந்தியத்திற்கான அமைச்சரிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அத்துடன், லிபரல் ஜனநாயக கட்சியின் எட் டேவி இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணை சாவலுக்கு உட்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.